மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் நாளை பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் விவகாரத்துறை அமைச்சர் முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) தெரிவித்துள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை தாம் தலைமை ஏற்றுள்ள பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் தமது ராஜினாமா முடிவை தெரிவித்ததாக அமைச்சர் முஹமட் ரிட்சுவான் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாளை காலை பிரதமர் மொஹிதின் யாசின், மலேசிய மாமன்னரை சந்திக்க இருப்பதாகவும், அப்போது தனது பதவி விலகல் முடிவை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் துணைப் பிரதமர் மொஹிதின் யாசின் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இவர்கள் மூவருமே மலேசியாவின் பூமிபுத்திரர்கள் என்று குறிப்பிடப்படும் மலாய்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்னோ (UMNO) கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும், வெவ்வேறு காரணங்களால் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள்.

2018 தேர்தலில், அன்றைய பிரதமரும் அம்னோ கட்சியின் தலைவருமான நஜிப் துன் ரசாக் ஓர் ஊழல்வாதி என்ற குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி மூவரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

அதன் முடிவில், பக்கத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்பட்ட அந்த மூன்று தலைவர்கள் அடங்கிய கூட்டணி, அன்றைய ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியையும் நஜிப்பையும் வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.

மலேசிய மாமன்னர், பிரதமர் இடையே மோதலா? – மொஹிதின் யாசின் மீது ‘ராஜ துரோக’ விமர்சனம்

மலேசியாவில் பரவும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு கொடிகள் இயக்கம் – எந்த நிறத்துக்கு என்ன பொருள்?

இதையடுத்து அமைக்கப்பட்ட பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அரசுக்கு மகாதீர் பிரதமர் ஆனார். அப்போது அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்த நிலையில், அவரது மனைவி வான் அஸிஸா நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். மேலும், மொஹிதின் யாசின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்த சில தினங்களில் அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, சிறையில் இருந்து விடுதலையானார்.

மகாதீர், அன்வாரை புறக்கணித்து ஆட்சி அமைத்த மொஹிதின் யாசின்

மலேசிய கொடி

மலேசிய கொடி

இந்த புதிய ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மகாதீர் பதவி விலகி, அன்வாரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு மகாதீர் காலம் தாழ்த்தி வந்ததை அடுத்து, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அன்வார் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதனால் அதிருப்தி அடைந்த மகாதீர், திடீர் திருப்பமாக தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

மேலும், அன்வார் இப்ராகிம் கட்சியைச் சேர்ந்த 11 எம்பிக்கள் திடீரென மொஹிதின் யாசினுடன் சேர்ந்து கூட்டணியை விட்டு வெளியேறினர்.

அத்துடன் நிற்காமல், எந்த அம்னோ கட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைக்கப்பட்டதோ, அதே அம்னோ கட்சியுடன் இணைந்து பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்தை அமைத்தார் மொஹிதின் யாசின். அவரே பிரதமராகவும் பதவி ஏற்றார்.

ஆளும் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியின் தலைவரான மொஹிதின் யாசின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசிய பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது முதல் அவருக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன.

எனினும், தமக்கு 115 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக மொஹிதின் கூறி வந்தார். மாமன்னரும் இதை ஏற்றுக்கொண்டதால்தான், தாம் பிரதமர் ஆனதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் சில தீர்மானங்களை வெற்றிகரமாக அவரால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் நூலிழையில்தான் அவரது தலைமையிலான அரசு நீடித்து வந்தது.

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. இரு தொகுதிகள் காலியாக இருப்பதால் தற்போது 220 எம்பிக்கள் உள்ளனர். எனவே, குறைந்தபட்சம் 110 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மொஹிதின் யாசினுக்கு தற்போது 110 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக கொரோனா நெருக்கடி வேளையில் அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் அமைதி காத்தன. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே நடப்பு அரசாங்கம் ஆட்சியில் நீடித்து வந்தது.

அவசர நிலையால் ஏற்பட்ட நெருக்கடி

மொஹிதின் யாசின்

மொஹிதின் யாசின்

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மாமன்னரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனமே, பிரதமர் மொஹிதின் யாசினுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை தாமதமாக தொடங்கியது, நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டாமல் இருந்தது, கொரோனா மற்றும் நிதி மேலாண்மையில் தோல்வி கண்டது, பொதுமக்களின் சிரமங்களை அறியாமல் பொருளாதார மீட்புத்திட்டங்களை அறிவித்தது என அரசாங்கம் பல்வேறு வகையிலும் தோல்வி அடைந்ததாக எதிர்க்கட்சிகள் சாடின.

இந்நிலையில், இம்மாதம் 1ஆம் தேதி அவசரநிலை முடிவுக்கு வருவதாக பெரிக்கத்தான் அரசு அறிவித்தது. ஆனால் இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

தமது ஒப்புதலைப் பெறாமல் மொஹிதின் யாசின் தலைமையிலான அரசு தன்னிச்சையாக அவசர நிலை சட்டத்தை திரும்பப் பெற்றதாக மலேசிய மாமன்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, மாமன்னருக்கு எதிராகச் செயல்பட்டதாக பெரிக்கத்தான் அரசை சாடிய எதிர்க்கட்சிகள், பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகவும் வலியுறுத்தின.

இதனால் ஆளும் தரப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், சில தினங்களுக்கு முன் பெரிக்கத்தான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த அம்னோ கட்சி அதை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 38 எம்.பி.க்கள் உள்ளனர். எனினும், 15 எம்பிக்கள் மட்டுமே கட்சியின் உச்ச மன்றம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டனர். ஆனால், ஆட்சியைக் கவிழ்க்க இந்த 15 எம்.பி.க்களே போதும் என்பதை நன்கு அறிந்திருந்த அம்னோ தேசிய தலைவர் சாஹித் ஹமிதி, அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

முன்னாள் பிரதமரும் அம்னோ கட்சியின் மூத்த தலைவருமான நஜிப் துன் ரசாக்கின் ஆதரவும் அவருக்கு இருந்தது.

வேறு வழியின்றி பதவி விலகும் மொஹிதின் யாசின்

மொஹிதின் யாசின்

மொஹிதின் யாசின்

அம்னோ எம்.பி.க்கள் 15 பேரும் அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, சத்ய பிரமாணங்களில் கையெழுத்திட்டு மாமன்னரிடம் ஒப்படைத்தனர். இதனால் மொஹிதின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மாமன்னரை அவர் சந்தித்தபோது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

செப்டம்பர் 7ஆம் தேதி அவர் தமது அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வார் எனக் கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்பட தாம் தயாராக இருப்பதாக மொஹிதின் யாசின் அறிவித்தார். ஆனால், நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளன.

இதனால் போதுமான ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து பதவி விலகுவது என மொஹிதின் யாசின் முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் தரப்பினர், அவரை பிரதமராக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

புதிய அரசு எப்படி இருக்கும்?

கோலாலம்பூர், மலேசியா

கோலாலம்பூர், மலேசியா

மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றுப்பரவல் உச்சத்தில் இருக்கிறது. அண்மைய சில தினங்களாக தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரம் அடைந்த போதிலும், அடுத்த சில தினங்களுக்கு இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போதைய சூழலில் தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை.

எனவே, பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறப்படும் அன்வார் இப்ராகிம் தரப்புக்கு அதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது மாமன்னர் வழிகாட்டுதலில் அங்கு இடைக்கால அரசு அல்லது அனைத்துக் கட்சிகளும் கொண்ட ஒற்றுமை அரசு அமைக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

நாளை பிரதமர் மொஹிதின் யாசின் மாமன்னரைச் சந்தித்த பிறகே அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.