முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது