தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: ‘அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்.’

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார்: ‘அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான்’ என்று சொன்னார்.

அவருடைய இனத்துவ அடையாளத்தின் காரணமாக தன்னுடைய வாழ்க்கையில் அடையக்கூடிய ஆகக்கூடிய உயரம் இவ்வளவுதான், என்று அவர் நினைக்கின்றார் என்றால் அந்த உணர்வின் பின்னால் தேடவேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்றும் அவை எந்த விதத்திலும் நியாயமற்றவை என்றும் கூறினார் அனுர குமார திஸாநாயக்க.

சந்திப்பின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிரேஸ்ட ஊடவியலாளரான திரு. மனோரஞ்சன் தெரிவித்த கீழ்காணும் கருத்துக்கு ஒரு நீண்ட நெடிய பதிலளிக்குபோதே மேற்கண்ட விடயத்தினை அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

மனோரஞ்சனின் கருத்து,

கனடாவுக்கு வருகை தந்த தோழர் அநுர குமாரவை மாற்றுத் தமிழ் அரசியல் சமூகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

முதலாவது நானும் நாங்களும் இலங்கையில் எம்மைத் தமிழர்களாக உணர்ந்ததும், உணர்வதும் ஒரு தவறுமல்ல/குற்றமுமல்ல . அதேபோல்தான் இஸ்லாமியர்களும் தம்மை இஸ்லாமியர்களாக உணர்வதும் தவறுமல்ல/குற்றமுமல்ல. சிங்கள பவுத்தவர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் தம்மை சிங்கள பவுத்தர்களாக நினைப்பதும், உணர்வதும் தவறுமல்ல/ குற்றமுமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என நினைக்கிறோம்.

ஆனால் இலங்கையில் நாம் தமிழர்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் பிரிந்து நின்று எம்மை நினைக்கவும் உணரவும் தூண்டிய தவறைச் செய்ததது யார்? யார் அந்த ஆட்சியாளர்கள்? ஏன் அப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இப்போது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் செய்த அந்த மாபெரும் அநியாயத்திற்கு நாம் எவ்வளவு இழப்பீடு கொடுத்திருக்கிறோம் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் இரண்டு தலைமுறையினருக்கு இன்னும் அந்த இரத்த வாடையை உணர முடிகிறது. கடந்த காலத்தின் தாக்கம் எமது மூன்றாம் தலைமுறையினரின் இதயங்களிலும் உணரப்படுகிறது. ஆனால் இன்று, அதை உங்களால் மாற்ற முடியும் என்று நாமும் நினைக்கிறோம். 1948 இல் செய்ய வேண்டியதை இன்று 2024 இல் செய்ய வேண்டும் என்று நாங்களும் நம்புகிறோம், ஆம் ஒரு முறை முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக, இலங்கையின் முழு அரசியல் கலாசாரத்தையும் முற்றாகச் சீரழித்த இந்த மேல்தட்டு வர்க்கப் பிரபுத்துவ ஆட்சி ஒரு முறையாவது உடைக்கப்பட்டு, சாதாரண மனிதர்களின் இதயத்துடிப்பை உணருகின்ற, மானுட ஈரம்கொண்ட அரசியல் இலங்கைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அது உங்களாலும் முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

மூன்றாவதாக, இலங்கை மக்கள் இன்று உண்மையான ஒரு மாற்றத்தைக் கோருகின்றனர். 2022ல் வீதிக்கு வந்த மக்களின் அரகலய போராட்டம் அந்த உண்மையை எமக்கு உணர்த்தியதாக நாங்கள் நம்புகின்றோம். அதனால்தான், சுதந்திரம் அடைந்து 75 வருடங்களின் பின்னர், உங்கள் ஐம்பது வருடகால அரசியல் பயணத்தில் முதன் முறையாக இலங்கையின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் மாற்ற மக்கள் இன்று உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால்தான் முன்பை விட இன்று மக்கள் உங்களை நோக்கி வருவதை நாங்கள் காண்கிறோம். உங்களின் பொதுக்கூட்டங்களுக்கு சுனாமியைப் போல திரண்டு வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்களின் அமைதியான கண்களில், அமைதியான முகங்களில் மற்றும் அமைதியான இதயங்களிலிருந்து ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞயை நீங்கள் பெறுகிறீர்கள். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். மக்களின் மவுனமாகிப்போன அந்த இதயங்களில் புதைந்து கிடைக்கும் வலியிலிருந்து வரும் செய்தியையும் அதன் உணர்வையும், துடிப்பையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் அது உங்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.- நன்றி.

பதிலளித்து பேசிய அனுரகுமார திஸாநாயக்க,

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது.

ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக… அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார்.

ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.

நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். ‘வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது… எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்…. எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்?

அவர்களால் எமது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசமுடியாது, நமது நாட்டின் கல்வி வளர்ச்சியை பற்றி பேச முடியாது, நமது நாட்டின் அபிவிருத்தியை பற்றி, நமது நாட்டில் ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு முறை பற்றி அவர்களால் பேசவும் முடியாது. நாட்டில் நடக்கின்ற குற்றச்செயல்களை குறைப்பது குறித்து அவர்களால் பேச முடியாது. நாட்டில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன? செய்திருப்பது என்ன? என்பதைப் பற்றி அவர்கள் பேச முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் அவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அந்த தோல்விகளை எல்லாம் அப்படியே இருக்க அவர்கள் என்னத்தைப் பற்றி பேசுகிறார்கள்? ‘இனத்தைப் பாதுகாக்க வேண்டும்…’ ‘எமது இனம் ஆபத்துக்குள் சிக்கியிருக்கிறது’. இப்படியான சுலோகங்களை 2015 ந்தாம் ஆண்டுக்கு பின்னரும் நாம் கேட்டோம். சில சுலோகங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ‘தேசியம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது’ என்ற சுலோகம் வந்தது. இரண்டாவது, ‘மீண்டும் புலிகள் புத்துயிர் பெற விரும்புகிறார்கள்’ என்ற சுலோகம் வந்தது. அடுத்தது, 2050தாம் ஆண்டு ஆகின்றதபோது முஸ்லிம் மக்கள் இலங்கையின் பெரும்பான்மையாக இருப்பார்கள் எண்டு சுலோகம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் என்ன செய்கிறார்கள். எமக்குள் அடங்கி கிடக்கின்ற அந்த ஆன்ம ரீதியான பண்பாட்டை அவர்கள் கிண்டி தூண்டிவிடுகிறார்கள். அதை தூண்டி விட்டதன் பின்பு நாங்கள் எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, எங்களுக்கு கல்வி தேவையில்லை, சாப்பிட உணவு இருக்கிறதா, எங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை இருக்கிறதா என்பது பற்றியும் அவசியம் இல்லை, எங்களுக்கு தொழில் இருக்கிறதா என்பது அவசியமில்லை, எங்களுடைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதா என்பதும் பிரச்சினை இல்லை, எங்கள் இனத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் தூண்டிவிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் எங்களுக்குள்ளேயே அதற்கு தேவையான மேலும் அதிக சுலோகங்கள் உருவாக்கப்படும்.

மதங்களை வைத்து மக்களை பந்தாடும் தலைமைகள்.

கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத சுலோகங்கள் மேலே வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டுமென்றால் திரு. ஹக்கீமின் கட்சிக்காரர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அங்கும் இது போசிக்கப்படுகிறது. இதேபோல் வடக்கிலும் இவ்வாறானவை போசிக்கப்படுகின்றன. அப்போது இறுதியில் நடப்பது என்ன? ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தார்களா என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போவதில்லை. மாறக தங்களுடைய இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு போய் வாக்குகளை கொடுக்கின்றார்கள். இப்படியும் சொல்வார்கள். ‘சாப்பிட இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் போதும். நமது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டும்..’. இவ்வாறாக எங்களுடைய உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இந்த எங்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதை இந்த தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உணர்வுகள் அதிகம் திட்டமிட்டு பரப்பப்பட்டு பின் அது இனவாதமாக உருவெடுக்கிறது. ஆகவே எங்களுடைய நாட்டில் இந்த இன வாதம் என்பது வரும் சாதாரண மக்களுக்கு இருக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு அரசியலாகும். எங்களுடைய நாட்டின் இனவாதம் என்பது ஒரு அரசியல் இனவாதம்.

சாதாரண பொதுமக்கள் இந்த இனவாதம் இருக்கிறது என்று சொன்னால், எமது நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்கள கிராமங்கள் இடையே பரவி வாழ்கிறார்கள். வடக்கில் மிகப் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதும் கூட கொழும்பு பகுதியில் பெரும்தொகையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். எனக்கு தெரியும்… அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் பரிசோதனைகள் போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அப்படி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அங்கு முழுமையான அமைதியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொதுமக்களிடையே இருந்த இன்வாத்தத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடந்தன. 1983ல் கலவர சம்பவங்கள் நடந்தது உண்மை. ஆனால் நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களிடம் அந்த இனவாதம் இருக்கவில்லை. நமது நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே. ஆகவே நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். இனவாதம் ஒரு அரசியலாக இருக்கிறது என்றால் அதற்கு எதிர்மாறாக இன ஐக்கிய அரசியலை கட்டியெழுப்புவதைத்ததான் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்து தமிழ், முஸ்லிம் மக்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு அவர்களும் கொடுக்கிறார்கள். அதே வேளை நாங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் தான் சிங்களமும் தமிழும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும். ஒரு கடைக்கு போய் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தமிழிலே பேசுகிறோமா சிங்களத்தில் பேசுகிறோமா என்பது அந்த வியாபாரியோடு இருக்கின்ற கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் ஒரு அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்த கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தங்கள் தாய்மொழியிலேயே கொடுக்கல் வாங்கல் செய்யும் அவருடைய உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தமிழ் குடிமகனுக்கு போலீஸ் நிலையத்திற்கு போய் தன்னுடைய தமிழ் மொழியிலே ஒரு முறைப்பாடு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், மொழிக்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அவ்வாறுதான் எங்களுக்கு இன்று நன்றாக தெரியும் ஒரு முஸ்லிம் நபர் போய் ஒரு முறைப்பாடு செய்கின்ற பொழுது அந்த முறைப்பாடு செய்த பின்பு கீழே வாசித்து அறிந்து புரிந்துக் கையெழுத்திடுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கும். அனால் உண்மையில் அவர் வாசிக்கவும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை, அது அவருக்கு புரியவுமில்லை. ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்டட்ட அந்த முறைப்பாட்டை வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டேன் என்று முஸ்தபா கையெழுத்து இடவேண்டும். இது சரியா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தோடு செயற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை அவருடைய சுய தாய்மொழியிலேயே அவர்கள் செய்வதற்கான அந்த உறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு இருக்கின்ற தடைகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

சகலருடைய மத, மொழி, கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்படல்வேண்டும்.

அடுத்தது, அவர்களுடைய கலாச்சாரத்தில் தனித்துவமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. சிலருக்கு தங்களுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவது அச்சம் தருவதாக இருக்குமானால் அது பிரச்சினை. என்னுடைய கலாச்சார அடிப்படையில் உடைகளை உடுத்திக்கொண்டு மினுவாங்கொட நகரத்துக்கு போவது ஆபத்தாக அல்லது அச்சம் தருவதாக இருக்கும் என்று அவர் உணர்கிறார்களா இருந்தால் அது ஒரு பிரச்சனை. எனக்கு தெரியும் இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றன. நான் இப்படி உடுத்திக்கொண்டு போனால் ஆபத்து இருக்கிறது, ஆகவே நான் இப்படி உடுத்திக்கொண்டு போக கூடாது, என்னுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை ஒளித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு வருவது சரியா? அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? அவர்களுடைய கலாச்சார பண்பாட்டுக் கலை கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மூலம், கல்வியின் மூலம், சமூக கருத்துக்களின் மூலம் அவை பாதுகாக்கப்பட வேண்டும், உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

ஆனால் இந்த கலாச்சார பண்பாடுகள் அல்லது கலாச்சார தனித்துவங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வது அவை நாங்கள் பிரிந்து இருப்பதற்கான ஒரு காரணி என்ற அடிப்படையிலிருந்து அல்ல. ஒரு தமிழ் சகோதரி நெற்றியிலே வைக்கின்ற பொட்டு தன்னை சிங்களவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கான ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? சிங்கள சகோதரி உடுத்துகின்ற மேல் நாட்டுப் பண்பாட்டு சேலை கட்டும் முறை தமிழர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு கலாச்சார அடையாளமாக இருக்க வேண்டுமா? ஒரு முஸ்லிம் பெண்மணி அணிகின்ற பர்தா சிங்களவர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு காரணியாக காட்ட முனைவது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களுடைய கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களுடைய அடையாளங்களை விட உயர்ந்தது என்று காண்பிக்க முயற்சிக்கின்றோம். அது தவறானது.

நான் சிங்களவன், நான் தமிழன், என்று காட்டிக்கொண்டு போக வேண்டுமா? நாங்கள் எங்களுடைய கலாச்சார விழுமியங்களை, பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் அவை காப்பாற்றப்பட வேண்டியது ஏனையவர்களுக்கு அது எதிரானதாக காட்டுவதற்காக அல்ல. ‘நான் இப்படி உடுத்திக் கொண்டு ஒரு நிகழ்வுக்கு பொகிறேன், அப்படிப் போய் மற்றவர்கள் மனங்களை நோகப் பண்ணப்போகிறேன்’ என்று சொன்னால் அது சரியா? அப்படியல்ல. அந்த கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களோடு மோதுவதற்காக கடைப்பிடிக்கப்படுவதல்ல.

மூன்றாவது நாங்கள் விரும்பிய மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை. எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்திற்காக அது தனக்கு ஒரு ஆபத்து என்ற உணர்வு வராமல் இருக்க வேண்டும். மதங்கள் என்பது அவரவருடைய நம்பிக்கை. நான் புத்த பகவான் போதித்த தர்மத்தை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். நபிகள் நாயகத்தினால் போதிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் பின்பற்றலாம். அதேபோல் கிறிஸ்தவர்களை எடுத்தால் இயேசு கிறிஸ்வினுடைய வாழ்க்கையை அல்லது பைபிளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் என்னுடைய மதம் உன்னுடைய மதத்தைவிட உயர்ந்தது என்று எங்களால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லமுடியாது. அது அவரவர்களுடைய நம்பிக்கை. என்னால் சொல்ல முடியுமா அவருடைய நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையை விட தரம் குறைந்தது? முடியாது. அது அவருடைய நம்பிக்கை. அது மட்டுமல்ல ஒரு மதத்தை பின்பற்றுவது, அல்லது ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகள் தடுக்கப்படுமானால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கலாச்சார உரிமைகள், அவருடைய மத வழிபாட்டுக்கான உரிமைகள், அவருடைய மொழிக்கான உரிமைகள் இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல்தான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை நான் சொல்லுகிறேன் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில்தான் சிலகலமாக அமர்ந்திருந்தார். அவருடைய சில சில அரசியல் கருத்துக்களோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு இப்படி சொன்னார். ‘அனுர,நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன். இந்தக் கருத்து நியாயமானது இல்லையா.

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார், அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான் என்று சொன்னார். அவருடைய இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் அவருக்கு தோன்றுகிறதா தன்னுடைய வாழ்க்கையில் அடைய கூடிய ஆகக் கூடிய உயரம் இவ்வளவுதான், இவ்வளவுதான் என்னால் அடைய முடியும் என்று. அது நீதியானது அல்ல. அவரால் பிரதம மந்திரியாக வரமுடியுமா ஒரு ஜனாதிபதியாக வரமுடியுமா என்பது வேறு கதை. ஆனால் அவருக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால், தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் என்னால் இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியாக வர முடியாது, எனக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியாது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால் அது அவ்வளவு நீதியானது அல்ல.

நாங்கள் அவரிடம் போய் ‘உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை’ என்று கேட்கலாம். ஆனால், ஒருவருக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், தாம் இந்த நாட்டில் என்னதான் இருந்தாலும் ஒரு இரண்டாம் தர பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றாலே அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அல்லவா? அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியலுக்குள், ஆட்சி அதிகாரத்துக்குள், சமூக செயற்பாட்டுக்குள் நியாயமான முறையில் பங்கேற்க அவர்கள் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும். உள்வாங்கப் படுவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். (கை தட்டல்)

அவர்களுடைய மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவருடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

மாகாண சபைகள் அவர்களது உரிமையாக கருதப்படுகின்றபோது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அடுத்தது, இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல, என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல் செய்ய முடியாது. அப்படியானால் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மாகாண சபை என்பது தங்களுடைய உரிமை என்று ஏற்றுக் கொள்கிறார்களாக இருந்தால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து அதை அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அது தீர்வா இல்லையா என்பதைப் பற்றி எதிர்காலம் முடிவெடுக்கட்டும். அது அவர்களின் பிரைச்சினைகளைத் தீர்த்ததா இல்லையா என்பதை அவர்களுடன் பேசுவோம். ஆனால் தற்போது அவர்கள் அந்த அமைப்புக்குள் தங்களுடைய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று நம்புகிறார்களாக இருந்தால் அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அரசியலுக்குள் அரசியல் முறைமைக்குள் நியாயமான முறையில் கலப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது, ஏனைய பொதுவான விடயங்கள். அவற்றில் சில விஷயங்கள் அரசியல் விஷயங்கள். நான் உங்களுக்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். உண்மையான விஷயங்கள் என்ன? நான் முதல் விடயமாக சொல்ல விரும்புவது, இனிமேல் வடக்கில் எக்காலத்திலும் ஒரு யுத்தம் ஏற்பட போவதில்லை. ஆனால், வடக்கிலே இருக்கின்ற பெற்றொர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே யுத்தம் செய்வதற்காகத்தான் என்று தெற்கில் ஒரு படத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். ‘மீண்டும் புலிகள் உருவாகுகிறார்கள், புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறார்கள்’…அதெல்லாம் நடக்க போவதில்லை. அது ஏன்? யுத்தத்தால் தென்னிலங்கையில் நடந்த வற்றையெல்லாம் நாம் வெறும் சம்பவங்களாக பட்டியலிடலாம். மத்திய மத்திய வங்கியின் மீதான தாக்குதல், எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் மீதான தாக்குதல், கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டது, பஸ்களில் குண்டுகள் வெடித்தன என்று சம்பவங்களை ஒரு அப்பியாச புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களில் எழுதலாம். ஆனால் வடக்கிற்கு 30 வருடங்களாக யுத்தம் தான் இருந்தது. வடக்கிலே இயக்கங்களுக்கு இடையிலான மோதலும் இருந்தது. இந்திய ராணுவம் வந்தபொழுது யுத்தம் இருந்தது. நாங்கள் வடக்கிற்கு சென்ற பொழுது அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். ‘இதோ இது இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பாதிப்பு, இது இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட அடையாளம்.’ ஒரே வீட்டில் காட்டினார்கள். ஏன் என்றால் அங்கே 30 வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. தென் இலங்கையில் யுத்தத்தோடு தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் பெரும் பாதிப்புக்களை கொடுத்துத்தான் இருக்கின்றன. ஆனால் வடக்கில் இருந்தது முழு யுத்தம். வடக்கின் தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெற்று வளர்ப்பது யுத்தத்துக்கு அனுப்புவதற்காக அல்ல. தென்னிலங்கை தாய்மார்கள் தந்தைமார்கள் போலவே அவர்களுக்கு நல்ல கல்வி, நல்ல தொழில் தேடி கொடுத்து, நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்து கொடுத்து, வீடு வாசலைக் கட்டிக்கொடுத்தல் போன்ற எதிர்பார்ப்புத்தான் அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கான கதவுகளை நாங்கள் அவர்களுக்கு மூடிவைத்திருக்கிறோம். எனவே உண்மையிலேயே அடி மட்டத்தில் வாழும் அந்த தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த கடந்த 30 வருட கால யுத்தத்தின் காரணமாக வடக்கிற்கு அவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவருடைய வாழ்க்கைக்கான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன ஆகவே அந்த வடக்கை குறிப்பாக மையப்படுத்தி அந்த மக்களுடைய நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவகையில் மிக வேகமான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் அந்த மக்களுக்கு 30 வருட வாழ்க்கை இல்லாமல் போயிருக்கிறது. எனவே நாங்கள் இந்த பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். மேற்தளத்தில் அரசியல் பிரச்சினை, அடித்தளத்தில் மக்களின் நாளாந்த பிரச்சினை. இந்த இரண்டுக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. இதையேதான் நாங்கள் வடக்கிலும் சென்று சொல்லுகிறோம் தெற்கிலும் சொல்லுகிறோம். நாங்கள் பல்வேறு வடகிழக்கு அரசியல்வாதிகளோடு கலந்துரையாடி கொண்டிருக்கின்றோம். அவர்களோடு பேசுகிறோம். ‘நாங்கள் 30 வருடமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். இறுதியாக கிடைத்த பலன் என்ன? இன்னும் 30 வருடம் மோதிகொள்வதா? இன்னும் 30 வருடம் சண்டை பிடிப்பதா? அல்லது நாங்கள் சேர்ந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணப்போகின்றோஂமா?’ ஆவே நாங்கள் இவை தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

வறுமையில் வாடும் ஒரு குழந்தை இழப்பது ஒரு நேர உணவு மாத்திரமல்ல அதன் சுய கௌரவத்தையும் சேர்த்துத்தான். இதை நான் அனுபவித்தவன்.

அடுத்ததாக மனோரஞ்சன் அவர்கள் கூறிய அடுத்த விடயம். அதாவது மக்களுடைய மனங்களில் இருக்கின்ற அந்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக எங்களுக்கு உணர்வு பூர்வமாக புரிதல் இருக்கிறதா என்பதே? எங்களுக்கு மக்களுடைய வேதனைகள் தூக்கம் என்பது ஒரு ஃபேஷன் அல்ல. நாங்கள் வாழ்க்கையின் வேதனைகளை நன்றாக உணர்ந்த மனிதர்கள். ஒரு பிள்ளை வறுமையில் இருக்கும் பொழுது அந்த பிள்ளைக்கு இல்லாமல் போவது வெறும் ஒரு நேர உணவு மட்டுமல்ல. நாங்கள் நினைக்கலாம் ஒரு குடிமகன் ஏழையாக இருப்பதால் ஒரு வேளை உணவு மட்டும்தான் கிடப்பதில்லை என்று…. அப்படி இல்லை. இந்த சமூகத்தில் பல்வேறு விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன. ஒரு மனிதன் என்கின்ற கௌரவமும் இல்லாமல் போகின்றது. ஒரு பாடசாலையில் ஆசிரியர் மிகவும் விரும்புவது நல்ல வெள்ளை நிறம் கொண்ட கொழு கொழுன்னு இருக்கும் பிள்ளையைத்தான். வறுமையால் காய்ந்து சுருங்கிப் போன குழந்தையை அல்ல. அவர்கள் கல்வியிலும் ஒதுக்கப்படுகிறார்கள். போலீசுக்கு போய் ஒரு முறைப்பாடு செய்யப் போனாலும் அங்கே போலீசார் நீண்ட நேரம் தாமதிப்பது ஒரு வறுமைப்பட்டவரின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்குத்தான். ஒரு வங்கியில் போனால் வரிசையில் இறுதியாக நிக்க வைக்கப்படும் ஒருவர் வறுமையானவராகத்தான் இருப்பார்.

எனவே வறுமை என்பது வெறும் பொருளாதார பிரச்சனை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சனை. இது நாங்கள் அனுபவப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் அனுபவப்பட்டது. இந்த வறுமை என்பது சாதாரண சமூக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. எனவே சாதாரண குடிமக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு அவற்றை அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதைப் போலவே எங்களாலும் அவற்றை உணர முடிகின்றது. மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கினார்கள், அரசாங்கங்களை உருவாக்கினார்கள். நாட்டில் இரண்டு முறை மக்கள் அந்த சந்தர்ப்பத்தை எமது நாட்டில் தலைவர்களுக்கு கொடுத்தார்கள். அதாவது எமக்குத் தெரிந்த காலத்தில். ஒருமுறை சந்திரிக்காவுக்கு கொடுத்தார்கள். 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தோற்கடித்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருகின்ற பொழுது மக்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பும் புத்தெழுச்சியும் காணப்பட்டது. ஆனால் சந்திரிகா மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பையும் புத்தெழுச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். இரண்டாவது கோத்தபாய அவர்களுக்கு 2019ல் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் அவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள் கோத்தபாயவின் மேடையில் ஏறினார்கள். அவ்வளவு காலமும் இலங்கை அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத வெளிநாட்டில் வாழ்ந்த இலங்கையர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு வந்தார்கள். மிக பெரிய துறைசார் நிபுணர்கள் கோத்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆனால் கோத்தாபய ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் சிதறடித்தார்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் நாட்டின் மக்கள் பாவம். அவர்கள் பாவம்… நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? எவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் போய் அந்த எதிர்பார்ப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன? எனவே எங்களுக்கு அந்த மக்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அவர்களுடைய இதயத்தில் உள்ள இதயத் துடிப்பு நன்றாக விளங்குகின்றது. அந்த இதயங்களின் வலி அதனுடைய பிரச்சனைகள் எல்லாம் எங்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதற்கான விடயங்கள் அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசுவது வெறும் பென்ஷனுக்காக அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசும்போது எங்களுடைய வாழ்க்கையிலே உண்மையாக நாங்கள் முகம் கொடுத்து அனுபவித்த அந்த உணர்வோடுதான் பேசுகிறொம்.

ஆகவே மனோரஞ்சன் சொன்ன விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் சொல்கிறோம் எங்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் கிடையாது அந்த மக்களுடைய அந்த உணர்வுகளை எதிர்பார்ப்புகளை சிதறடிப்பதற்கு. அந்த மக்களை ஒரு சிறிய அளவில்கூட ஏமாற்றுவதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. (கைதட்டல்) அது போதும்.. அது போதும்…அந்த மக்கள் பாவம். இல்லையா…? அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கத்தை கவிழ்க்கிறார்கள்…எதிர்பார்ப்புகளுடன் பட்டாசு கொளுத்துகிறார்கள், பாற்சோறு உண்கிறார்கள் அவர்கள் என்னதான் செய்யவில்லை..? ஆனால் ஓரிரு வருடங்கள் தான் அவருடைய எதிர்பார்ப்புக்கள் … அவை மீண்டும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே நாங்கள் நினைக்கிறோம் அந்த மக்களுடைய அடி மனதுகளின் வேதனைகளில் இருந்து வருகின்றன உணர்வுகளோடு எதிர்பார்ப்புகளோடு அரசியலை நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாளைக்கும் உங்கள் முன்னால் வந்து எங்களால இப்படி பேசக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவேதான் முதலிலேயே உங்களுக்குச் சொன்னேன் நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம். ஆகவே நாளையும் உங்கள் முன்னால் வந்து இப்படியே பேசக்கூடிய ஒரு அரசை நாங்கள் உருவாக்குவோம்.

ஆகவே இனப் பிரச்சனை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்து இதுதான் நன்றி