பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ உலங்கு வானூர்தி
இதனையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு
வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்