அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்குமாறு அரசாங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் (09) வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிட்டமைக்கு, எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் உண்மைகளை தெளிவுபடுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
மேலும், அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கும் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தனியான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R. M. A. L. Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தேர்தல் நோக்கங்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான செயல்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் முறைப்பாடுகளை தாக்கல் செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் நோக்கங்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்திய சம்பவங்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான வாக்கெடுப்புக்கு இடையூறாக இருப்பதால் திடீரென நிறுவனங்களை சோதனையிட தனி குழுக்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அரச சொத்துக்களை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணைந்திருங்கள்