மக்களுக்கு நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 2000 மெட்ரிக்தொன் சீனி முறைகேடாக வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தொற்று நிலைமை காரணமாக மக்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச நிறுவனம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் விநியோகித்து வருகின்றோம். 

அதன் பிரகாரம் மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 3500 மெட்ரிக்தொன் சீனியில் 2000 மெட்ரிக்தொன் காணாமல் போயிருக்கின்றது. 

இந்த சீனி தொகையை வியாபாரிகளுக்கு முறைகேடாக வழங்குவதற்கு ஒருசில சதொச முகாமையாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை இடை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றோம். இவர்கள் மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக அதிகூடிய தண்டனையை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அமைச்சர் கூறினார்.