அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகி கிராமத்தில் நேற்று அதிகாலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் வீடுகளும் சேதமாகியுள்ளன.

நேற்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று வீடொன்றை முற்றாக சேதமாக்கிய பின்னர் வீதி அருகில் இருந்த இன்னுமொரு வீட்டினுள் நுழைந்து சேமாக்கியுள்ளது.

இந்நிலையில் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண், யானையை விரட்டி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். யானையின் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் இரு பிள்ளைகளும் அடிபட்டு வீழ்ந்த தாயை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்காத நிலையில் தாயின் உத்தரவிற்கு அமைய வெளியே ஓடியுள்ளார்கள்.

சம்பவம் குறித்து அயலவர்களும் உயிரிழந்த பெண்ணின் தாயும் கூக்குரலிட்டு யானையை விரட்ட முயற்சித்தபோதும் மீண்டும் யானை பெண்ணை தாக்கிவிட்டு வெளியேறி சென்றுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை கிராமத்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றபோது தம்மை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பதுடன் அருகில் இருந்த இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாய் புலம்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பிரபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர் குறித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் யானை தொல்லையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.