கோட்டா(Gotapaya Rajapaksa), மகிந்த(Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் இலங்கை மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று   எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை மீண்டும் 70களின் யுகத்திற்குக் கொண்டு செல்லவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்திற்கு மக்கள் பணியைச் செய்யமுடியாது. ஆனால் தினசரி பொருட்கள் விலைகளை மாத்திரம் உயர்த்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறது. மக்கள் இன்று எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.

ஆனால் இலங்கை அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையையும் அதிகரித்திருக்கின்றது. ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்றவில்லை.

பொருட்களின் விலை அதிகரிப்பால் ஓய்வூதியர்கள் மாத்திரமல்ல, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு சிறியதொரு தொகையை வழங்கி, அதனை எரிவாயு விலையை அதிகரிக்கச்செய்து பெற்றிருக்கின்றது.

கெளரவமாக வாழ்ந்துவந்த விவசாயிகளை வீதிக்கு இழுத்திருக்கின்றது. அத்துடன் அரசாங்கம் வரிசை யுகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பால்மாவுக்கு வரிசை, எரிவாயு பெற்றுக்கொள்ள வரிசை, சீமெந்து வாங்குவதற்கு வரிசை என அரசாங்கம் 70, 77 யுகத்தையே மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது.

69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது இருண்ட யுகத்தை உருவாக்குவதற்கா? என கேட்கிறோம். இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக நாட்டில் இருக்கும் 220இலட்சம் மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இதற்கா மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்கின்றேன்? எனத் தெரிவித்துள்ளார்.