கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது.
சுகாதார வல்லுநர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள் தவறானவை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தை சங்கடப்படுத்த எதிர்க்கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக விமான நிலையம் மூடப்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த பி.சி.ஆர் ஆய்வகம் நிறுவப்பட்டது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
விமான நிலையம் மூடப்பட்ட போதிலும், இலங்கையர்களை திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவு செய்தபோது, அங்குவரும் பயணிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள குறித்த ஆய்வகம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மினுவங்கொடையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டபோது கம்பஹா உள்ளிட்ட நாட்டின் பலபகுதிகளில் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை குறித்த ஆய்வகத்தின் ஊடாக வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
இணைந்திருங்கள்