பாராளுமன்றம் அமர்வு நாளை (05) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதுடன், பிற்பகல் 4 மணிவரை முழு நாளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


நாளையதினம் (05) பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூலவிடைக்காக 50 கேள்விகளைக் கேட்பதற்கு வாய்பு வழங்குவது தொடர்பில் சபை முதல்வரும், வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.


அன்றையதினம் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நான்காவது நாளாக ஏப்ரல் 07ஆம் திகதி நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


இதற்கு மேலதிகமாக, அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம் உள்ளிட்ட 08 விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.


இதற்கிடையில், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல முன்வைத்த யோசனைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணைக்கு வழங்கப்படும் ஒரு மணித்தியால நேரத்தில் இரண்டு கேள்விகளைக் கேட்பதற்கு 20 நிமிடங்கள் அனுமதி வழங்கவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் காணப்பட்டது.