பேராசிரியர்.சோ.சந்திரசேகரன்

கோ.நடேச ஜயருடன் தொழிற்சங்க அரசியல் பணிகளில் இணைந்து பணியாற்றிய புரட்சி கவிஞர் பி.ஆர். பெரியசாமி தனது சொந்த பணத்தில் 1957 ம் ஆண்டு எழுதி வெளியிட்ட தோட்டத் தொழிலாளர்களின் வீரப்போராட்டம் என்ற வரலாற்று ஆவணம் 2021 ஜனவரி பொங்கல் அன்று மீள் பிரசுரமாக வெளிவருகிறது. வரலாற்று ஆய்வாளர் எச்.எச்.விக்ரமசிங்க மீள்பிரசுரம் செய்யும் இந்த நூலிற்கு பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதி.

அமரர் பெரியசாமி அவர்கள் தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம் என்ற தலைப்பில் 1957 ஜூலை மாதம் எழுதி வெளியிட்ட சிறு நூல் ஒன்று எச்.எச்.விக்கிரமசிங்கவின் பெருமுயற்சியால் இன்று தமிழ் வாசகர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதற்காக முதற்கண் விக்ரமசிங்கவை பெரிதும் பாராட்ட விரும்புகிறோம். அண்மைக்காலங்களில் அவர் சென்ற நூற்றாண்டில் இலக்கியத் துறையிலும் அரசியல் தொழிற்சங்க துறைகளிலும் பல்வேறு சிறப்புமிகு பணிகளை ஆற்றி விட்டு மறைந்த மறையாத பல ஆளுமைகளை தேடி கண்டறிந்து மக்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு அரிய பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர்களின் பெயர்களை மட்டுமன்றி அவர்தம் எழுத்துகளை தேடிக் கண்டறியும் முயற்சியில் கடுமையாக உழைத்து வருகின்றார். இந்தவகையில் அவர் அரசாங்க சுவடிகள் திணைக்களத்தை மட்டுமன்றி மலையகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சென்று கs ஆய்வையும் கண்டறிகிறார். அவருடைய தேடல் முயற்சி ஒரு பல்கலைக்கழக இளம் ஆய்வாளரின் பணிகளை ஒத்தது.

இந்த வகையில் எனக்குத் தெரிந்த இணை பாரிய பேராசிரியரான உசைன்மியா அவர்கள் மலாயர்கள் இலங்கையில் வாழ்ந்த பல இடங்களுக்குச் சென்று மலாயர்களின் பழைய இலக்கியங்களையும் எழுத்துப் பிரதிகளையும் தேடி கண்டறிந்தார். இந்த எழுத்துக்களின் உதவியோடு அவர் சர்வதேச புகழ்பெற்ற பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு புகழ் பெற்றார். விக்ரமசிங்க அவருடைய ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு மலையக ஆளுமைகள் மற்றும் அவர்களுடைய எழுத்துக்களை கண்டறியும் முயற்சிகளின் ஒரு குறிகாட்டி ஆகவே பெரியசாமியின் இந்நூல் மறு பதிப்பாக இன்று வெளிவருகிறது.

மலையக மக்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாறுகள் பற்றிய நூல்களும் ஆய்வேடுகளும் பல வெளிவந்துள்ளன. எவ்வாறாயினும் மக்களின் போராட்ட வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற ஒரு குறைபாட்டை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது நோக்கில் இம்மக்களின் பின்தங்கிய சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆய்வேடுகள் தாராளமாக உண்டு. தொழிற்சங்க வரலாறு பற்றி சில நூல்கள் உள்ளன. ஆயினும் போராட்டம் பற்றி சரியாக ஆராயப்படவில்லை என்ற கருத்தை யாம் பல மேடைகளில் கேட்டிருக்கின்றோம். மலையக மக்கள் இலங்கையில் கால் வைத்த காலத்திலிருந்து பல கொடுமைகளையும் துயரங்களையும் எதிர்நோக்கியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம். இம் மக்கள் இக்கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாளாவிருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது. போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும் போதுதான் வெற்றியும் பாராட்டத்தக்கதாக இருக்கும் என தோமஸ் பெய்னா என்ற அறிஞர் கூறினார்.

“இன்றைய போராட்டத்தின் ஊடாக எதிர்காலத்துக்கு தேவையான வலிமையை மக்கள் பெற்றுக் கொள்கின்றார்கள். போராட்டங்களில் இருந்து வலிமை உருவாகின்றது. போராட்டங்கள் வலிமை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் என மக்கள் உணரும் போது அவர்களுடைய எதிர்மறை எண்ணங்கள் மறைந்து விடும். போராட்டம் இல்லாவிடில் முன்னேற்றமில்லை. மனிதனுடைய இன்றைய மேம்பாட்டுக்கு காரணமே அவன் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்கள் தான்” என்றெல்லாம் பல பேரறிஞர்கள் கூறியிருக்கும் போது மலையக மக்கள் போராட்டங்களில் இருந்திருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.

ஒக்ஸ்போர்ட் அகராதியின் படி “போராட்டம் என்பது மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள அல்லது தம் மீதான தாக்குதல்களை தவிர்த்துக் கொள்ள மேற் கொள்ளும் சக்தி வாய்ந்த முயற்சியாகும். போராட்டம் பற்றிய இத்தகைய விளக்கங்கள் இருக்கத்தக்கதாக மிகமோசமான அடக்குமுறைகளை பல முனைகளில் இருந்தும் எதிர்நோக்கிய மக்கள் நிச்சயமாக வாளாவிருக்கவில்லை” என்பதே பெரியசாமியின் இச்சிறுநூல் எடுத்துக் காட்டுகின்றது. பிரித்தானியப் பேரரசின் அடிமைமுறை ஆனது 1830 களில் ஒழிக்கப்பட்டிருந்தாலும் அடிமைமுறையின் சில அம்சங்கள் தென்னாசியாவில் தொடர்ந்jது. அதையே மலையக மக்களின் ஆரம்பகால வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அவற்றில் பல இன்றைய காலகட்டத்தில் காலாவதியாகிவிட்டாலும் பெரியசாமியின் நூல் அக்காலத்தில் இருந்த தோட்டத்துரை தனத்தாரின் அக்கிரமங்களை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய கொடுமையான அட்டூழியம் காட்டுதர்பார் என்பவற்றின் ஊடாக மலையக மக்கள் நெளிந்து வளைந்து போராடி இன்று மலையக மக்கள் என்ற பெயரோடு தேசிய நீரோட்டத்தில் இணைந்து உள்ளார்கள் என்பதை பெரியசாமி தமது வீறுகொண்ட உரம் மிக்க எழுத்துக்களால் வாசகர்களை கவர்கிறார்.

அமரர் பெரியசாமி வாழ்ந்த காலம் வித்தியாசமானது. இன்று அக்கால அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. இன்று எவ்வளவுதான் வருமான வேறுபாடுகளும் வர்க்க வேறுபாடுகளும் இருந்தபோதிலும் அவை அரசியலில் வெகுவாக பிரதிபலிப்பதில்லை. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, கோளமயமாக்கம் மற்றும் நவ தாராளவாத சிந்தனைகளின் தாக்கம், ஐக்கிய அமெரிக்காவின் மேல் ஆதிக்கம் என பற்பல காரணங்களால் வர்க்க வேறுபாடுகளையும் சுரண்டல் முதலாளித்துவத்தையும் மையமாக வைத்து பாட்டாளிகளின் புரட்சியையும் பொதுவுடைமை சமூகத்தையும் வலியுறுத்திய புரட்சிகர சித்தாந்தங்கள் இன்று மௌனித்துப் போய் உள்ளன. நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பல்வேறு அளவுகளிலும் நிலைகளிலும் நவதாராளவாத தனியார் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டவை. பல கட்சிகள் இனம் சார்ந்தவை. பழைய சமவுடைமை கட்சிகளின் இறப்பு, முகவரி என்பவற்றை காணமுடியவில்லை. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களை முன்வைத்து தீவிர அரசியல் செய்த புகழ்பெற்ற பல அரசியல்வாதிகள் எம்மத்தியில் இருந்தனர்.

சோவியத் யூனியன், சீனா, கியூபா ஆகிய நாடுகளில் வெற்றிகண்ட பொதுவுடைமை சக்திகளின் உடைய சித்தாந்த பிரதிபலிப்பு நாட்டிலும் மலையகத்திலும் எதிரொலித்தது. முதலாளித்துவ அமைப்பின் கல்லறையிலே பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் எழுச்சி பெறும் என்பதற்கு மேலே கூறப்பட்ட நாடுகளின் மக்கள் புரட்சி காரணமாக அமைந்து பெரும் நம்பிக்கையை ஊட்டின. தென்னிந்தியாவில் தெலுங்கானா புரட்சியும் வடமாநிலங்களில் நக்கல்பாரிகளும் எழுச்சி கண்டு ஆதிக்க சக்திகளுக்கு பெரும் பயமுறுத்தல்களாக அமைந்த காலம் அது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் என்னதான் காந்தியடிகளின் அகிம்சை தத்துவங்களை தமது சத்திய சோதனை ஆக வைத்துக் கொண்டாலும் அங்கும் பகவத் சிங்குகளும் நேதாஜிகளும் தோன்றி அடக்குமுறைகளுக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு செயலிலும் இறங்கி இருந்தனர். ஆஸ் துiu போன்ற கொடுங்கோலர்கள் கொல்லப்பட்டு பகவத்சிங் தூக்கிலிடப்பட்டார்.

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் இராமலிங்க அடிகளார் தொடக்கி வைத்த புரட்சிகர சிந்தனை கொடுமுடிகளாக திகழ்ந்த பாரதியும் பாரதிதாசனும் முறையே தேசிய உணர்வையும் தமிழ் உணர்வையும் மக்களுக்கு ஊட்டினர். “ஓங்கி வளர்ந்ததோர் கம்பம். அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம்” என்று பாடிய பாரதி, “பறையனுக்கும் இங்கு தீய புலையனுக்கும் விடுதலை” என்று சுதந்திர முழக்கம் செய்தார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி என சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று. அது சதி என்று கண்டோம்” என முழங்கினான் பாரதி.

“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்
ஒரு நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ” என்ற புரட்சிக் குரல் எழுப்பினர்.

இத்தகைய சர்வதேச புரட்சிகர சிந்தனைகள் இலங்கையில் பரவலாக ஒலித்த போது இலங்கையின் மலை முகடுகள் எங்கும் இப்புரட்சி சிந்தனைகள் துரித கதியில் பட்டு தெறித்தன. வெள்ளையர்களால் பின்வந்த தேசிய முதலாளித்துவத்தாலும் இன்னல்களுக்கு உள்ளாகி நொந்து போய்க் கிடந்த உரிமையற்ற நாடற்ற மலையக மக்களை எழுச்சி பெறச் செய்யும் வல்லமை கொண்டதாக இச் சர்வதேச சூழல் அமைந்தது.

இலங்கை பொதுவுடைமை கட்சியில் சித்தாந்தங்களுக்கு அப்பால் சென்று உலகளாவிய புரட்சியை மேற்கொண்டதால் தான் சமதர்மம் நீடித்து நிலைக்கும் என உலக புரட்சியை நம்பிய டிரொட்ஸ்ய சித்தாந்தத்தின் வழித்தோன்றலாக வந்த லங்கா சமசமாஜ கட்சியின் அற்பணிப்பு தொண்டராக பணியாற்றிய அமரர் பெரியசாமி மலையகத்தில் இத்தகைய புரட்சிகர பாதைதான் அம்மக்களுக்கு விடிவைத் தேடித் தரும் என நம்பினார். இடதுசாரி இயக்கத்தில் தன்னம்பிக்கையுடன் இணைந்து உழைத்தார்.

இத்தகைய ஒரு துணிச்சல் மிக்க மலையக பாட்டாளி மக்களின் இன்னல்களை கண்டு வீராவேசம் கொண்ட பல ஆளுமைகள் தங்கள் வாழ்க்கை நலன்களை பணையம் வைத்து இயக்க ரீதியாக செயற்ப்பட்டது உண்டு.

அத்தகைய ஆளுமைகளில் ஒருவரான பெரியசாமி கடந்தகால புலனாகாத அரசியல் நெடுங்கதை தொடர்பான நிகழ்வுகளை வெளிக்கொணர்வதில் அயராது பாடுபட்ட விக்ரமசிங்கவின் பணிகளை இவ்விடத்து மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டும். சமசமாஜக் கட்சியின் ஒரு முக்கிய மலையகச் செயற்பாட்டாளரான பெரியசாமி 1930 களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமசமாஜிகளால் உருவாக்கப்பட்ட “சூரியமல்” இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். கட்சித் தலைவர் கலாநிதி என். எம்.பெரேராவுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்தார். பிரித்தானியர்கள் புரட்சிகரமாக அவரை அடையாளம் கண்டமையால் அவர் தமிழகத்துக்கு ஒளிந்து ஓடி அங்கு விஸ்வநாதன் என்ற பெயரில் வாழ்ந்தார். பின்னர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் கன்னங்கராவின் இலவசக் கல்விக் கொள்கையை விமர்சித்து ஒரு அரிய நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர். பிற்காலத்தில் இலங்கையின் ஒரு தங்கமுளை எனப் பாராட்டப்பட்டவர். அத்தகைய ஒரு மகா புருஷர் உடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெரியசாமிக்கு உண்டு.

1930 களில் மலையக பாட்டாளி மக்களின் பின்தங்கிய நிலை கண்டு வெகுண்டெழுந்து அவர்களுக்காக அந்நிய ஆதிக்கத்துடன் போராட்டம் நடத்திய வெகுஜன போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர் பெரியசாமி. இவரைக் கவர்ந்த தலைவர்கள் எல்லாருமே ஆதிக்கத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக போராட்ட களத்தில் இறங்கியவர்கள். 1960 களில் கொழும்பு விவேகானந்த சபையில் நிகழ்ந்த ஒரு பாராட்டு விழாவில் தந்தை செல்வநாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கமும் கலந்து கொண்டனர்.

தமது அரசியல் நெடும் பயணத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக பெரியசாமி அவர்கள் தமது சொந்த வாழ்க்கை மேம்பாடு பற்றி கருத்தில் கொள்ளாது போராட்ட வீரனாக செயல்பட்டார்.

இத்தகைய ஒரு நீண்ட பின்புலத்தைக் கொண்ட பெரியசாமி 1957இல் மலையக தொழிலாளர்களின் ஈழப்போராட்டத்தை ஒரு சிறு நூலில் பதிவு செய்தார். போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த ஏப்ரகோன், கோவிந்தன் ஆகியோரின் தியாகங்களை பற்றி நூலில் பதிவு செய்துள்ளார். தமது வாழ்க்கை அனுபவத்தில் கண்டவற்றையும் கேட்டு அவற்றை ஆதாரமாகக் கொண்டு உணர்வு மிக்க ஒரு பெரிய நிகழ்வை இந்நூலில் பதிவு செய்திருந்தார். மலையக மக்கள் தமது உரிமைப் போராட்டத்தில் அடக்குமுறைக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. நியாயமான வெகுசன போராட்டங்களில் ஈடுபட்டு தமது இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் என்பதை பெரியசாமி உணர்வுமிக்க சொற்களால் நினைவு கூருகின்றார்.

“மலையகத் தொழிலாளர்களின் வீரப் போராட்டம்” என்ற நூல் தலைப்புக்கு பொருத்தமான முறையில் அவருடைய நூல் முழுவதுமே போராட்ட நிகழ்வுகள் விரிவாக சித்தரிக்கப்படுகின்றன. போராட்டத்திற்கான உடனடி காரணங்கள், அவை இடம்பெற்ற தோட்டங்கள், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள், ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் விளைவுகள் என்பனவற்றைப் பற்றி பெரியசாமி அவருக்கே உரிய கோபாவேச மொழியில் நூலை எழுதியுள்ளார்.

பிற்காலத்தில் சாரல்நாடன், அந்தனி ஜீவா போன்றோர் தொழிற்சங்கவாதி நடேசய்யர் பற்றி விரிவான நூல்களை எழுதினர். 1957 இல் வெளிவந்த இந்நூலில் பெரியசாமி நடேசய்யர் இணைந்து போராடியவர் என்ற முறையில் அவர் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை பெரியசாமி தமது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். அக்காலத்தில் ஐயர் வழங்கிய தலைமைத்துவம் ஆட்சியாளர்களுடன் சமரச பாணியில் அமையாது கடும் எதிர்ப்புகளையும் அதனால் அந்நிய ஆட்சியாளர்கள் ஐயர் மீது காட்டிய வெறுப்புணர்வையும் பெரியசாமி நூலில் ஆவணப்படுத்தி இருக்கின்றார். அத்துடன் இக்கால பகுதியில் நடத்திய போராட்டங்களின் தீவிரத்தன்மை காரணமாகவே நாடு சுதந்திரம் அடைந்தது, வெள்ளைக்கார தோட்ட துரைமார்கள் தென் ஆபிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றதாக பெரியசாமி குறிப்பிடுவது ஒரு முக்கிய செய்தியாகும். இவ்விடயம் பற்றி மேலும் ஆராய வேண்டும்.

1930 களில் மக்களை சந்தித்து அவர் சூழல் பிரச்சினைகளை அறிந்து கொள்ள பல இந்தியத் தலைவர்கள் மலையகத்துக்கு வந்தனர். அவருடைய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம் பெற்றது பற்றிய தகவல்களை அவர் நூலில் தந்துள்ளார். பல வருடாந்த மகாநாடுகளின்போது பல இந்தியத் தலைவர்கள் அதில் பங்குகொள்ள வந்தமை பற்றியும் அவர்களுக்கு வெள்ளையர் அரசு கொடுத்த தொந்தரவுகளை பற்றியும் நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

அண்மையில் கட்டுரையாளரும் கலாநிதி ரமேசும் மலையக மக்கள் தொடர்பான ஆங்கில தமிழ் ஆய்வேடுகள் பற்றிய ஒரு நூல் விபரப் பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில் பட்டியலிடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வேடுகளுக்குள் இச்சிறுநூல் அடங்கவில்லை. காலத்தால் முந்திய இந் நூல் வெளியீடு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு எனினும் கைகளுக்கு எட்டாததால் பட்டியலில் அது சேர்க்கப்படவில்லை. கால அடிப்படையில் வைத்து நோக்குமிடத்து 1957 இல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தன்னலம் கருதாத ஒரு போராளியின் வீராவேசக் குரலை வெளிப்படுத்தும் இந்நூலானது ஒட்டுமொத்த மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை குறித்த அவர்களுடைய தர்மா வேகத்தின் பிரதிபலிப்பாகவே இந்தச் சிறுநூலை எம்மால் தரிசிக்க முடிகின்றது.