மலையகத் தமிழர்கள்  இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது – என்று காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (07.12.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். நிகழ்வு ஏற்பாடுகள் சம்பந்தமாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகப்போகின்றன. இதனையொட்டி பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தோட்ட மட்டத்தில் கலாச்சார,  விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளும் , தோட்ட வாரியாக நடத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். எமது வரலாறு தொடர்பான தேடலுக்காக கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் .

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று நடத்தினாலும் அனைத்து தரப்பினரும் இதில் இணைந்து கொண்டு தமது ஒத்துழைப்புகளை வழங்கலாம்.

எமது தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் எல்லா நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெறும். விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைகளும் இடம்பெறும்.

இந்தியா உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளை நிகழ்வுகளுக்கு அழைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.  இலக்குகளை அடைவது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.