அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் முழுமையாக தோல்வியடைந்துள்ளது .தற்போது விற்பதற்கு எதுவும் இல்லை என்பதால் துறைமுக நகரை விற்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கூட இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை. இவ்வாறான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும் போது நீதிமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு வார காலம் காணப்படும்.

எனினும் இந்த சட்ட மூலம் விடுமுறை ஆரம்பமாகும் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தில் காணப்படும் பாரதூரமான விடயங்கள் நாட்டுக்கு வெளிப்படுவதை தடுப்பதற்காக சூட்சுமமாக அரசாங்கம் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த சட்ட மூலத்தில் நிதி சலவை சட்ட உறுப்புரையை உள்ளடக்க வேண்டும். அத்தோடு இது தொடர்பில் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த துறையுடன் தொடர்புடையவர்களின் ஆலோசனை இன்றி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது.

தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு எமக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இதன் ஒரு சிறு பகுதி கூட விற்கப்படவில்லை.

எனவே துறைமுக நகரத்தை நாடாளுமன்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதோடு , கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு இதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுதோறும் அறிக்கை தயாரிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு நிதி சலவை சட்ட உறுப்புரையையும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்க வேண்டும் என்றார்.