இஸ்ரேலில் வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் சனத்தொகையில் 81 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாலும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருவதாலும் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பைசர் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதுடன், பெரும்பாலானோர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

அத்துடன், தொற்றாளர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும், வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு வருபவர்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமிருந்து உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் பரவினால், அது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு சவாலாக அமையலாம் என்பதால் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பங்காடிகள் போன்ற உள்ளக இடங்களில் முகக்கவசம் அணிதல் வேண்டும் என்றும், இதனால் எப்போதும் முகக்கவசங்களை பொதுமக்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனாவிலிருந்து மீண்டெழும் நாடுகளின் பட்டியல் நாம் முன்னணியில் உள்ளோம், எனினும், இன்னும் நாட்டிலிருந்து கொரோனா முழுமையாக அகலவில்லை. அது மீண்டும் திரும்பிவரலாம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.