எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசாங்கம் குறைத்தது மட்டுமல்லாமல், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

என்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் என்னைக் கொல்ல ஒரு சதி நடைபெறுவதாகவும் கூறி எனக்கு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அண்மையில் நடந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் நான் பங்கேற்றதால் அமைச்சர் சரத் வீரசேகர எனக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பை நீக்கினார்.

மேலும் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு நீக்கப்பட்ட கையோடு,என்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 11 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

“இந்த சந்தேக நபர்கள் இப்போது சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.ஆனால் என் உயிருக்கான அச்சுறுத்தல் நீங்கவில்லை. இந்த 11 பேரும் எனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு இருக்கின்ற அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பை பெற்றுத்தருமாறு நான் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்துள்ளேன்.ஆனால் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.ஆனால் என் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை அரசாங்கம் விடுவிக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.