நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ள அரசாங்கம் தனது இயலாமையை மறைக்கவும், அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதைக் காட்டிவிட்டது. நியாயத்தைப் பெற்றுக்கொள்வது என்பதே தற்போது நாட்டில் உள்ள பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

கடந்த சில தினங்களில் அரசாங்கம் செய்த பல பாரதூரமான தவறுகள் சமூகமயமானது. 15 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் சீனி மோசடி குறித்து நாட்டு மக்கள் பெரியளவில் பேசி வந்தனர். விஷ தேங்காய் எண்ணெய் தொடர்பில் நாட்டில் பெரிய பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது அதனையும் மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கச் செய்து வருகின்றனர். சுற்றுச் சூழல் அழிப்பு, வன அழிப்பு என்பன நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அது மாத்திரமல்ல, ஈஸ்டர் தாக்குதலில் பிரதான சூத்திரதாரி என்ற பிரச்சினையிலும் அரசாங்கம் சில தினங்கள் சிக்கி இருந்தது. துறைமுக நகரைச் சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் முழு நாட்டு மக்களும் தமது அதிருப்தியை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தினர் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.