மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (25) பதுளை ரிவ சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணத்திற்கான புதிய காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா மகளிர் அணி செயலாளர் சுவர்ணலதா பிரதேச சபை உறுப்பினர், கிருஸ்ணவேனி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் பிரதி செயலாளர் பத்மநாதன் பிரதி செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவஞானம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராதாகிருஸ்ணன், இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் பொது மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதே போல 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பொழுது மலையக மக்கள் அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டார்கள்.

அன்று அந்த விடயங்களை நினைத்தும் பார்த்தும் ஒரு சில பெரும்பான்மை சமூகத்தினர் சந்தோசப்பட்டார்கள். இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லை இது தனியே பெரும்பான்மை மக்களுக்கான நாடு என்று பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? பல நாடுகள் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு காரணம் பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரையும் இந்த நாட்டின் பிரஜைகளாக நினைக்கவில்லை.

தனியே இந்த நாடு பெரும்பான்மை மக்களுக்கு சொந்தமான நாடு என கூறுகின்றார்கள். இந்த நிலைமை தொடருமானால் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் பல தீவுகள் உருவாகலாம். அதன் முதலாவது தீவாக தற்பொழுது கொழும்பில் அமைக்கப்பட்டு வருகின்ற போட் சிடி என்று சொல்லப்படுகின்ற அபிவிருத்தி சீனாவின் தீவாக மாறிவிடும்.

இப்படி பல தீவுகள் இங்கே உருவாகி இலங்கை என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விடும். எனவே இந்த நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.

அப்படி ஒன்றுபடாவிட்டால் ஆண்டவன் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. எனவே இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் தமிழர்கள் முஸ்லிம்கள் ஏனையவர்களையும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாக இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருவப்படாது.என்பதுதான் உண்மை. எனவே இதனை புரிந்து இந்த அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.