உலகின் மிகப் பலம்பொருந்திய பல நாடுகள், ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது.
பெரும் வணிகமும் அதனால் குவிந்த செல்வமும், அந்தச் செல்வத்தால் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும், விரிவடைந்த ஆயுத மற்றும் படைபலம், இந்த நாடுகளின் வல்லமைக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன.
முழு உலகையும் தனது சாம்ராஜ்யமாக்குவது, அலெக்ஸாண்டர், ஹிட்லர் போன்ற பலரினது கனவு. ஆனால், அந்தக் கனவை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலக நாடுகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதில், வல்லரசுகள் இப்போதும் குறியாக இருக்கின்றன.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகின் இரு துருவ வல்லரசுகளாகின. அமெரிக்க ஆதரவு, சோவியத் ஒன்றிய ஆதரவு என்ற இருபிரி நிலையை, உலகம் எதிர்கொண்டது.
இந்த நிலையில்தான் இந்தியா, எகிப்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள்: ‘அணிசேரா நாடுகள்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட 120 நாடுகள், இதில் அங்கம் வகித்தன. ஆனால், அணிசேரா நாடுகளாக அவை அறிவித்துக்கொண்டாலும், ஏதோ ஒரு வகையில், சோவியத் ஒன்றியம், அமெரிக்க சார்புகளைப் பெரும்பாலான நாடுகள் கொண்டிருந்தன.
உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி காலத்தில் கூட இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1962 இந்தோ-சீன யுத்தத்தின் போது, சோவியத் ஒன்றியம் நடுநிலைமை வகித்தது.
1960களில் சீனாவை விட, இந்தியாவுக்கு சோவியத் அதிக உதவிகளை வழங்கியிருந்தது. ஆகவே, அணிசேரா நாடுகளாக இருந்தாலும், அவற்றில் பல ஏதோவொரு வகையில் அமெரிக்க, சோவியத் ஒன்றியம் என்ற இருதுருவங்களில், ஒரு துருவத்தைவிட மற்றையதற்கு நெருக்கமாகவே இருந்தார்கள்.
இலங்கையில், 1970இல் ஆட்சியேறிய சிறிமாவோவும் அவரது இடதுசாரித் தோழர்களும் ‘ஐக்கிய கூட்டணி’ என்ற பெயரில் அரசாங்கம் அமைத்தார்கள். அந்த அரசாங்கத்தில், மேம்பட்டு நின்ற முதலாளித்துவப் பொருளாதார எதிர்ப்பின் விளைவாக, இயல்பாகவே சோவியத் ஒன்றிய சார்பு நிலையைக் கொண்டதாக தன்னை உருவாக்கிக் கொண்டது.
சிறிமாவோ அரசாங்கம், சோவியத் ஒன்றியம், சீனா, இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. சிறிமாவோவின் அந்தத் துர்ப்பாக்கியம் மிக்க ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள், பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த வரலாற்றைச் சொல்லக் கேட்கலாம்.
சோறும் கறியும் உண்டு வாழ்ந்த வளமான நாட்டு மக்கள், மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை, சிறிமாவோவினதும் அவரது இடதுசாரித் தோழர்களினதும் கிட்டத்தட்ட ஏழு வருட ஆட்சி உருவாக்கியது.
இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு, அவர்கள் செய்த துரோகம் குறிப்பிடத்தக்கது. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக, இலங்கையை ஆண்ட அனைத்துப் பெருந்தேசியத் தரப்புகளும் செயற்பட்டுள்ளன என்பதால், அது சிறிமாவோவுக்கு மட்டும் உரிய ‘சிறப்பு’ அல்ல!
சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முயன்றுகொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன, அமெரிக்க சார்புடையவராக இருந்தார்.
ஜே.ஆரின் அமெரிக்க சார்பு, எவ்வளவு வௌிப்படையானது என்றால், அது அவருக்கு ‘யங்கி டிக்கி’ என்ற பட்டப்பெயரை பெற்றுத்தருமளவுக்கு அமைந்திருந்தது. பாணுக்காகவும் காற்சட்டை தைப்பதற்கான துணிக்காகவும் என வரிசையில் காத்துக்கிடந்த மக்களுக்கு, மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று ஜே.ஆர் உறுதியளித்தார்.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை மாற்றுவேன் என்பது ஜே.ஆரின் உறுதிமொழியாக இருந்தது. ஆனால், வெறுமனே சொல்லிவிட்டு ஜே.ஆர் அமைதியாக இருக்கவில்லை; அல்லது, வனஜீவராசிகளைப் படம் பிடிக்கப் போகவில்லை; அல்லது, பியானோ வாசித்துக்கொண்டிருக்கவில்லை. ஜே.ஆர் வீதிக்கிறங்கினார்; ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். சிறிமாவோ அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் மனநிலையை, தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஜே.ஆர் களத்தில் இறங்கினார். அதற்காக முதலில் தனது கட்சியை ஒற்றுமைப்படுத்தினார்.
ஜே.ஆரும் பிரேமதாஸவும் நண்பர்கள் அல்ல. அவர்களிடையே பொதுவானவைகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட எதுவுமில்லை. அவர்கள் இருவேறுபட்ட ஆளுமைகள். ஆனால், ஜே.ஆர், பிரேமதாஸவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். இந்த நாட்டின் அடித்தட்டு மக்களிடையே பிரேமதாஸ கொண்டிருந்த செல்வாக்கை அவர் உணர்ந்திருந்தார்.
பிரேமதாஸவுக்கு அவருக்குரிய இடத்தை வழங்கி, அவரையும் அரவணைத்து, சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு ஜே.ஆர் செயற்பட்டார். இங்கு, ‘செயற்பட்டார்’ என்பது கவனிக்க வேண்டிய சொல்.
அந்த விடாமுயற்சி, 1977இல், ஜே.ஆருக்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்தது. 5/6 பெரும்பான்மையுடன், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, வௌிநாட்டுக் கொள்கையும் மாறிய சந்தர்ப்பம் அது. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக, இலங்கையில் பெரும் உற்பத்தித்துறை உருவாகத் தொடங்கியது. இலங்கையர்கள் வீடுகளில் தொலைக்காட்சிகள் வந்தன. உற்பத்தி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பொருளாதார ரீதியில் இலங்கை குறிப்பிட்டளவு முன்னேற்றத்தைச் சந்தித்தது. இனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கும்.
ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாதிகளைத் தொற்றிக்கொண்டுள்ள நோய், ‘இனவாத அரசியல்’. அதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவேதான், அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் இன்னும்கூட, முடியாத காரியமாக இருக்கிறது. நிற்க!
இன்று, உலக அரசியல் பரப்பு மாறியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு, பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், உலகின் தனித்த செல்வாக்கு மிக்க நாடாக, ‘உலக பொலிஸ்’காரனாக அமெரிக்கா உருவானது.
இந்தியாவும் திறந்த பொருளாதாரத்தை அரவணைத்தக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவின் நண்பனானது. 1947இல் பாகிஸ்தான் என்று ஒரு நாடு தெற்காசியாவில் உருவாகியதிலிருந்து, அமெரிக்காவும் பாகிஸ்தானும் மிக நெருங்கிய உறவைக் கொண்ட நாடுகளாக இருந்துள்ளன.
பாகிஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கமே இந்தியாவுக்கு எதிரானதாக, அல்லது மாற்றானதாக அமைந்திருந்தது. இந்தியாவின் அமெரிக்க விரோதப் போக்கு, அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கமாவதற்குக் காரணமாகியது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, இராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வாரி வழங்கியது.
பூகோள அரசியலில், தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைகொள்ள வைக்க அமெரிக்கா, பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதிக்கம் கொண்ட போது, அதனை வீழ்த்த, அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு உதவியது, இதில் பாகிஸ்தானின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை சோவியத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்க, அமெரிக்காவுடன், பாகிஸ்தான் இணைந்து செயற்பட்டது. இங்கு அமெரிக்கா, முஜாஹிதீன்களாக வளர்த்துவிட்ட பயங்கரவாதம்தான், 2001இல் அமெரிக்காவையே ஆட்டிப்போட்டது.
1990களில் பாகிஸ்தான் இரகசிய அணுவாயுத அபிவிருத்தி, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அது சரிசெய்யப்பட்டாலும், பாகிஸ்தான், குறிப்பான பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் அளித்து வந்த ஆதரவு, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து விரிசலை ஏற்படுத்தியது.
9/11இற்குப் பிறகு, இது அமெரிக்காவுக்குப் பெருந்தலையிடியாக மாறியது. ஒரு தசாப்த காலமாக, அமெரிக்கா தேடிவந்த பின் லேடன், பாகிஸ்தானில் இருந்தமையும், அமெரிக்கா பாகிஸ்தானுக்கே தெரியாமல், பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின் லேடனைக் கொன்றமையும் அமெரிக்க-பாகிஸ்தான் உறவை இன்னும் பலவீனமாக்கியது.
இதேவேளை, சமகாலத்தில், இந்தியா திறந்த பொருளாதாரத்தை அரவணைத்ததும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத்துறையின் அதீத வளர்ச்சியும், அதன் மூளையாகவும், உற்பத்திச் சாலையாகவும் இந்தியா அமைந்தது, இந்திய – அமெரிக்க உறவை பலப்படுத்தியது. இதில் மன்மோகன் சிங் என்ற ஆளுமையின் பங்கு, இந்திய வரலாற்றில் மறக்கமுடியாதது.
மறுபுறத்தில், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாடு, குறிப்பாக இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இன்னொரு பொது அரங்கைத் தோற்றுவித்தது.
இந்தியாவோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்த அதேவேளை, பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு வலுவிழக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் முன்னாள் காதலி என்ற நிலையிலிருந்து, பாகிஸ்தானை மீட்க ஒரு புதிய காதலன் வந்தான்.
ஆனால், அந்தப் புதிய காதலனின் நிகழ்ச்சிநிரல், உலக அரசியல் ஒழுங்கை மாற்றியமைப்பதாக இருந்தது.
இணைந்திருங்கள்