திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த அறிவிப்பு பிரதிபலிக்கிறது. இத்துடன், இலங்கையின் பொருளாதாரம் ஏன் இவ்வளவு சிக்கலுக்கானது, இதில் உதவிய நட்புநாடுகள் என்ன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்பை வெற்றிகொள்ளும் இந்தியாவும், திண்டாடும் ஏனைய நாடுகளும்!
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவும் இதனால் பெரும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தப் போர் உலகம் முழுவதும் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருள் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் இந்த ஏற்றுமதிகள் தடைபட்டுள்ளன. இந்த உணவுப் பொருள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டையும், உணவுப் பொருள் விலையேற்றத்தையும் சந்தித்துள்ளன. எரிபொருள் விலையேற்றத்திலும் இந்தப் போர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்தது.
ஆசியாவில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியா இதனை வெற்றிகரமாக கையாண்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது.
இந்தியப் பொருளாதாரம் குறித்து அண்மையில் பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தனைப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 7 சதவீதத்துக்கும் குறைவான பணவீக்கமே ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
”பணவீக்கம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை. உக்ரைன் போர் கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொருளாதார மீட்சி நிலையானது, ஏற்றுமதிகள் தற்போது மீட்பு நிலையை அடைந்து கொண்டு இருக்கிறது. பெப்ரவரி மாதம் ஏற்றுமதி வளர்ச்சி பரவலாக மாறாமல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 25.1 சதவீதம் வளர்ச்சியடைந்தது” என்று இந்திய நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள்!
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுகளைச் சந்திக்க உலகத் தலைவர்களுடனான சந்திப்புக்கள், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள், உறவுகள் முக்கியமானவை.
ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரச தலைவர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களும் விமர்சிக்கப்பட்டன. ஆனால், இந்தத் தலைவர்களின் இராஜதந்திர சந்திப்புக்கள் அதனால் ஏற்பட்ட, ஏற்படப் போகும் பிரதிபலன்கள் அதிகமாகும்.
இலங்கை ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் தலைவர்களைச் சந்தித்து, இலங்கைக்கு சாதகமான பல செய்திகளை எடுத்துவந்திருந்தார். அதேபோல இந்தியப் பிரதமரும் பல இராஜதந்திர சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
ரஸ்ய – உக்ரைன் போரினால் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் குறையும் என்றும், இனி ஆசியா உலகில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைனஸில் தெரிவித்திருந்தார்.
இதனை நன்கு அறிந்துவைத்துள்ள இந்தியப் பிரதமர், தனது சர்வதேச ரீதியான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறார். இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகம் என்று விமர்ச்சிக்கப்பட்டாலும், இந்தியப் பிரதமரினால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு வருமானம், பலநூறு மடங்கு அதிகம்.
இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள்!
இலங்கை வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவிகள் இன்றியமையாதது.
இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்தபோது இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியின் போது இந்தியாவை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேபோல, திருகோணமலையில் உள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால் இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். அன்று எண்ணெயத் தாங்கிகளை வழங்கியிருந்தால் இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை காலியானதால் இன்று வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளும் காலியாகியுள்ளன. இதனால் மக்களின் வயிறுகளும் காலியாகியுள்ளன. இனிமேலும் திருகோணமலை அபிவிருத்தியின் போது இந்தியாவை விட்டுவிட்டு பயணிக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையின் இந்தியாவின் முதலீடுகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதியின் கருத்துக்கள் பிரதிபலித்தன.
இந்த நிலையில் தான், அண்மைக்காலமாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வடக்கு கிழக்கு பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீகோபால் பாக்லே, கடந்த ஒக்டோபர் முதல் வாரத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களிக்கு பயணித்திருந்தார்.
அண்மைக்காலமாக இலங்கையின் சக்தித் தேவையை நிவர்த்தி செய்வதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் உயர்ஸ்தானிகர் இந்தப் பயணத்தின் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்தபோது இந்தியாவின் முதலீடு குறித்து வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பும், இந்திய சீன பேச்சுவார்த்தையும்!
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்தியா நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் மூன்று பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளுக்கு பின்னர் 2.9 பில்லியன்களையே இலங்கைக்கு வழங்க கொள்கையளவில் முன்வந்துள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகார மட்ட உடன்பாட்டை இலங்கை எட்டியிருந்தாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியுள்ளது. குறிப்பாக கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பரிஸ் கிளப் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. அத்துடன், இலங்கையின் கடன் வழங்குநர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
இந்த கடன் மறுசீரமைப்புப் பணிகளின் போது, இந்தியா, சீனா, ஜப்பான ஆகிய நாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. கடன் வழங்குனர்களுடன் பேசி, கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும். கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்தியாவுடன் இதுகுறித்த முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், சீனா எவ்வித பதிலையும் இன்னும் வெளியிடவில்லை. சீனா இங்கு என்ன செய்யப் போகிறது என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உதவுவதற்குப் பதிலாக கழுத்தை நெரித்து சீனா குளிர்காய நினைக்கிறதா என்ற பயம் கலந்த கேள்வியும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்