கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாமறிவோம். அது, நிச்சயமாகத் தமிழர்களோ அரசாங்கமோ அல்ல!ஆசியாவின் மீதான ஆவலின் விளைவால், உதித்துள்ள பூகோளஅரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமே ஜெனீவாவில் அரங்கேறியது.

வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டன என்பதைப் பார்ப்பதன் மூலம், அதை இலகுவில் புரிந்துவிட முடியும்.இலங்கை, இன்று பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையர்கள் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, பொருளாதாரச் சங்கிலியில் கீழ்நிலையில் உள்ளவர்கள், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரத்துக்கு, இராணுவமயமாக்கல் புதிய அதிகாரத்தையும் வலுவையும் வழங்கியுள்ளது. இதற்கு, ‘ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தின் அவசியம்’ என்ற முகமூடி வெகுவாகப் பொருந்துகிறது.

இன்று, சிறுபான்மையினர் தொடர்ச்சியாகப் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையையே அரசாங்கம் தனது ‘சமூக மூலதனமாகக்’ கொள்கிறது.ஜெனீவாவில் நடந்தவை ஆச்சரியம் தருபவையோ எதிர்பாராதவையோ அல்ல. ‘திருவிழா’ தொடங்கி முடியும் வரையான காலத்தில், ஒரு நகைச்சுவையான சாகசப் படத்தைப் பார்க்கும் மனோநிலையே காணப்பட்டது.

திருவிழாவுக்கு முன்பு, அதைப் பற்றிய கனவுக் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதில் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ஊடகங்களில் பலவும் போட்டியிடுவதும், பின்பு ஏமாற்றிவிட்டார்கள் என்று அழுது புலம்புவதும் நமக்குப் பழகிவிட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு திருவிழாவுக்கும் முன்பு சொன்னவற்றை ஒப்பிட்டால், எல்லாமோரு சுவடியின் பிரதிகளாகத் தெரியும்.

ஜெனீவா திருவிழா, என்னவோ தமிழரின் அவலம் பற்றியது மட்டுமே என்ற மயக்கம் நம்மிடையே அதிகமிருக்கையில், அடிக்கடி எழுகிற ஒரு வினா, ‘பொய்யென்று அறிந்தும் ஏன் அதே பொய்யை மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கிறோம்’?

கசக்கும் உண்மையை விட இனிக்கும் பொய் நம்மைக் கவர்கிறது என்பது ஒரு காரணம்; உண்மைகளை விசாரித்தறியவும் விவாதிக்கவும் நமக்கு வாய்ப்புகள் குறைவு என்பது இன்னொரு காரணம். அத்துடன் பிற களங்களில் நிகழ்வன பற்றித் தேடியறிந்து, பிறரின் அனுபவங்களினின்று கற்கும் மரபு குறைவாகவுள்ளது.சர்வதேச விசாரணை பற்றித் தமிழ் மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை, தமிழீழ விடுதலை, சமஷ்டி ஆகியன பற்றி இருந்த நம்பிக்கைகளுடன் ஒப்பிடலாம்.

முந்திய இரண்டிலும், தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தைச் சில தலைமைகளிடம் ஒப்படைத்து அவற்றையே நம்பியிருந்தனர். அவை ஏன் தவறின என்பது பற்றி, இங்கு மீண்டும் பேசத் தேவையில்லை.சர்வதேச விசாரணையைப் பொறுத்தவரை, அது, ‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொட்டிய’ ஒரு வரம் மாதிரித் தெரிந்தது. நமக்குச் சாபங்களுக்கும் வரங்களுக்கும் வேறுபாடு தெரிவது குறைவு.ஐ.நா மனித உரிமைகள் பேரவை, போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேச்செடுத்த நாள் முதல், இங்கும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்நாட்டிலும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை விட்டால், போர்ப் பாதிப்புகளில் வேறெதனுடைய முக்கியத்துவமும் போய்விட்டதெனலாம்.காணாமலாக்கப்பட்டோர் பற்றியும் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் நில மீட்புப் பற்றியும் பாதிக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரல்கள் எழும்வரை, எந்தத் தமிழ்த் தலைமையும் அவற்றை முன்வைத்துப் போராடவோ போராடுமாறு மக்களுக்கு வழிகாட்டவோ முன்வரவில்லை.சர்வதேச சமூகம், தமிழ் மக்களைப் பற்றி அக்கறை காட்டுகிறது என்ற மயக்கம் இல்லாதிருந்தால், தமிழ் மக்களிடையே சர்வதேச சமூகமும் ஐ.நா சபையும் இந்தியாவும் பற்றிய பொய் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்ப தமிழ்த் தலைமைகள் முயன்றிரா; பொய் நம்பிக்கைகளைக் காட்டி, வாக்குச் சேகரிப்பில் இறங்க வாய்ப்பு இருந்திராது. வருடாந்தம் ஜெனீவாவுக்குத் தலயாத்திரை போய், வெட்டி விழுத்தப்போவதாக நாடகமாட இடமிருந்திராது. நல்லவேளை, இந்தமுறை இந்த அபத்தக் கதைகளிலிருந்து கொவிட்-19 நோய் பரவுகை காப்பாற்றியது.பேரினவாத அரசாங்கம் சர்வதேச விசாரணையை மட்டும் மறுக்கவில்லை. அது, எந்த நியாயமான விசாரணைகளையும் விரும்பவில்லை. அரச படைகளை மட்டுமே இலக்குவவைத்து விசாரணைகளை வேண்டுவதாக அது கூறுகிறது. அதன் மூலம், சிங்கள மக்களிடையே போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிரான எண்ணத்தை வளர்த்துள்ளன.

அவர்களுடைய உபாயங்களை முறியடிக்கும் மாற்று உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் வகுக்கவில்லை.தமிழ்த் தேசியவாதம், உலக அரசியலையோ பிராந்திய அரசியலையோ விளங்கிச் செயற்படுவதாகச் சொல்ல இயலாது. கண்மூடித்தனமான மேற்குலக விசுவாசமும் இந்தியாவை அண்டிநிற்கும் போக்கும் தமிழ்மக்களின் நலன்கருதி விளைந்தன வல்ல. அதில் தமிழ்த் தேசியவாதத்தின், தலைமைகளின் முதலாளியச் சார்புக்கும் அதையொட்டிய ஐக்கிய தேசிய கட்சி அனுதாபத்துக்கும் ஒரு பங்குண்டு.தமிழ் மக்கள் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வாக்களித்து, பிரதிநிதிகளைத் தெரிந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள். தெரிவான பிரதிநிதிகள் மக்களை விடாது ஏய்த்து வந்துள்ளார்கள். ஆனாலும் நாமும் விடாது அதே பிரதிநிதிகளைத் தெரிகிறோம்.

அவர்களில் சிலரைப் பிடிக்காவிட்டால், நம்மை ஏமாற்றப் புதிய தலைகளைத் தெரிகிறோம். இந்த மனநிலையை என்னவென்பது?ஒன்றில் கட்சியை மாற்றுவது அல்லது, ஆட்களை மாற்றுவது என்ற இரண்டு வழிகளிலேயே, தமிழ் மக்கள் தம் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணும் முனைப்புகளில் ஏற்படும் இடர்களைக் களைய முனைந்துள்ளார்கள். மாகாண மட்டத்தில் ஆட்சி அதிகாரத்தை உடைய வடமாகாண சபையாலோ தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பதவியையும் உடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தாலோ எதுவும் இயலவில்லை. பத்தாண்டுகால ஜெனீவாத் திருவிழாவாலும் எதுவும் ஆகவில்லை.வளரும் அந்நியக் கடன் சுமையிடையே தவறும் பொருளாதாரமும் தீர்க்காத தேசிய இனப்பிரச்சினையும் மோசமாவதன் பயனாக, சீரழியும் சமூக இணக்கமும் அமைதியும் அரசியல்வாதிகள் பலருக்கும் தொடர்புள்ள குற்றச் செயல்களிடையே சட்டமும் ஒழுங்கும் எதிர்நோக்கும் நெருக்கடியும் பொறுப்பற்ற நுகர்வால் சிதையும் சுற்றாடலும் சுயாதீனமான அயற் கொள்கையின் சிதைவால் நாட்டின் இறைமை எதிர்நோக்கும் சவால்களும் உட்பட, நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாவிடத்து, இஸ்லாமிய பயங்கரவாதத்தினின்று நாட்டைக் காப்பாற்றுவது பற்றிய பேச்சுகளும் புலம்பெயர் தேசங்களில் வலுப்பெறும் விடுதலைப்புலிகள் என்ற பொய்களுமே இந்த அரசாங்கத்தின் பிரதான ஆயுதங்களாக உள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களே அரசாங்கம் தன்னை தொடர்ச்சியாகப் ‘பாதிக்கப்பட்டரோகக்’ காட்டிக் கொள்ள உதவுகிறது.

இந்த அரசாங்கத்தின் ஆதரவுத்தளமும் அதுதான் என்பதை அது நன்கறியும்.இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றிய கருத்தாடலில் உரையாற்றிய இலங்கைக்கான தூதுவர் சி.ஏ. சந்திரபிரேம ‘இத்தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது இலங்கைச் சமூகத்தைப் துருவங்களாகப் பிரிப்பதோடு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.’ என்று தெரிவித்துள்ளார். இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கையின் செல்திசையை அடையாளங்காட்டி நிற்கின்றன. இன்று இலங்கையின் சிறுபான்மையினர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். ஒருபுறம் புதிய அரசியலமைப்புக்கான வேலைகள் நடக்கின்றன. சிறுபான்மையினரது அடையாளங்களும் நிலங்களும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

ஜெனீவாவில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வாகாது. அதனிலும் மேலாக இலங்கையின் ஜனநாயகத்தைத் தக்கவைப்பதென்பதே பாரிய சவாலாக உள்ளது.மூன்று விடயங்கள் உடனடியானவை. முதலாவது, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றிக் கிடைப்பதையும் வாழ்வாதாரங்கள் உள்ளமையையும் எவரதும் சுயமரியாதையான சமூகப் பயனுள்ள வாழ்வுக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் நலமான வாழ்வுக்குமாக அத்தியாவசியமான சேவைகளை உறுதி செய்தல்.

இரண்டாவது, பாதுகாப்புத் துறையின் பணிகளை முற்றிலும் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பான அலுவல்கட்கு மட்டுப்படுத்துவதுடன் குடிசார் அலுவல்களிலும் அரசியலிலும் பாதுகாப்புத் துறை குறுக்கீட்டைத் நிறுத்துவதை உறுதி செய்தல்.மூன்றாவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உறுதிப்படுத்தலும் நீதிமன்றங்களின் பொறுப்பான நடத்தையையும் உறுதிசெய்தல்.

இவை சாதிக்க இலகுவானவையல்ல; அதேவேளை இயலாதனவுமல்ல. இன்று இலங்கையர்கள் முன்னுள்ள சவால், இவை மூன்றையும் உறுதிப்படுத்துவதாகும்.