சுவிற்சர்லாந்து இன்று ஆகஸ்ட 4 புதன்கிழமை முதல், இங்கிலாந்து, இந்தியா மற்றும் நேபாளம் முதலிய நாடுகளை, கோவிட் மாறுபாடு பட்டியலில் இருந்து நீக்குகிறது.

இதற்கான உத்தரவினை நேற்று செவ்வாய்கிழமை மாலை, சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகம் அறிவித்தது. ஆகஸ்ட் 3 திகதி வரையிலான நிலவரப்படி, இந்தியா, நேபாளம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை கறுப்புப் பட்டியலில் இருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு நாடும் அந்தப்பட்டியலில் இல்லை என அறியவருகிறது.


ஆதலால் மேற்குறித்த நாடுகளில் இருந்து மக்கள் சுவிற்சர்லாந்துக்கு வரும் போதிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இதனால் சுவிஸ் குடிமக்கள் மற்றும் இந்த நாடுகளுக்கு பயணம் செய்த குடியிருப்பாளர்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சுவிற்சர்லாந்திற்கு வருகை தரும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.

இதன்படி, வைரஸிலிருந்து தடுப்பூசி அல்லது மீட்கப்பட்டவர்கள் இப்போது சோதனைகள் அல்லது தனிமைப்படுத்தல் இல்லாமல் நுழையலாம். அதேவேளை, நீங்கள் தடுப்பூசி போடவில்லை அல்லது வைரஸிலிருந்து மீளவில்லை என்றால், சுவிற்சர்லாந்திற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, 72 மணி நேரத்திற்கு மேற்படாத எதிர்மறை பிசிஆர் சோதனை அல்லது 48 மணி நேரத்திற்கு மேற்படாத எதிர்மறை விரைவான ஆன்டிஜென் சோதனை வழங்க வேண்டும்.