எம்.எல்.எம். அன்ஸார்
03-08-2021 அன்றுடன் முப்பத்தியொரு வருடங்கள் கடந்திருக்கின்றன.
காத்தான்குடி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளி வாயலில் மஹ்ரிப் தொழுது விட்டு பள்ளியின் ஹவுளுப் பக்க முன்வாயில் படிக்கட்டுகளில் நான் கவிஞர் ஜவ்பர்கான், கவிஞர் எம்.எம்.ஜுனைதீன், ஆரிப் (ஹயாத்துக்கான் மாஸ்டரின் இளைய மகன்) ஆகியோர் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருக்கிறோம். புலிகளின் அச்சறுத்தல் அதிகரித்திருந்த காரணத்தால், எச்சமயத்திலும் அவர்கள் ஊருக்குள் ஊடுருவக்கூடும் என்ற எச்சரிக்கையோடு அப்போது ஊர் முழுவதும் வீதி வீதியாக விழிப்புக் குழுக்கள் இயங்கி வந்தன.
வயது வித்தியாசமின்றி ஆண்கள் இப்பணியில் இரவு முழுக்க ஈடுபடுவார்கள். இவர்களுக்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் பெண்கள் வீடுகளில் இருந்து தேநீர்,கஞ்சி போன்றவற்றை தயார் செய்து வழங்கி அவர்களும் கண் விழித்து ஊர் பாதுகாப்பு பணியில் பங்கு கொள்ளுவார்கள்.
இந்த அடிப்படையில்தான் நாங்கள் நால்வரும் பள்ளிவாயலின் முன் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறோம். இந்நிலையில் வீதியில் வழமையான ஆட்கள் நடமாட்டம் இருப்பதுடன் பள்ளிக்கு சற்று தூரத்தில் சிறிய தேநீர் கடை ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நங்கள் கதைத்துக் கொண்டிருக்கிறோம். நேரம் நகர்ந்து செல்கிறது, பள்ளி வாயலில் இஷா தொழுகைக்கான அதான் ஒலிக்கிறது.
அதான் ஒலித்து முடிகிறது, எங்களோடு பேசிக்கொண்டிருந்த சகோதரர் ஆரிப் உடனே தொழுவதற்காக பள்ளிக்குள் செல்கிறார், நாங்கள் மூவரும் வுழுவுடன் இருந்ததால் இகாமத் சொல்லும் வரை காத்திருக்கிறோம்.
இகாமத் சொல்லுவதற்கான நேரம் நெருங்கும் சமயம் பார்த்து, பள்ளியிலிருந்து சுமார் பத்து பன்னிரண்டு மீற்றர் தூரத்தில் மோதினார் லேனிலுள்ள வீட்டிலிருந்து கவிஞர் ஜுனைதீனின் ராத்தா (பஸ்கான் அல்லது பதீக் அசரீரியின் உம்மா ) தேத்தண்ணீர் குடிப்பதற்காக அழைக்கிறார்.
நானும் ஜுனைதீனும் பரீனா ராத்தாவின் வீட்டிற்குச் செல்கிறோம். கவிஞர் ஜவ்பர்கான் அவருடைய வீட்டிற்குச் சென்றுவிட்டு தொழுகைக்கு வருவதாகக கூறிவிட்டுப் போகிறார்.
தேநீர் கடும் சூடாக இருக்கிறது. ஜமாஅத்தோடு தொழச் சுணங்குவதாக ஜுனைதீன் என்னை அவசரப்படுத்துகிறார். என்னால் முடியவில்லை. விரைவாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு சூட்டோடு குடித்துவிட்டு பள்ளிக்குப்போகத் தயாராகி வீதியில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத் திறக்கிறேன். அது வழமைக்கு மாறாக திறக்க முடியாமலிருக்கிறது. ஜுனைதீனும் நானும் மாறி மாறி முயற்சிக்கிறோம், முடியவில்லை. சற்று நேரத்தில் சைக்கிள் பூட்டு ஜுனைதீனின் கையால் திறக்கப்பட இருவருமாக சைக்கிளில் ஏறி பள்ளிக்குப் போவதற்குத் தயாரான அதே நிமிடம் மீரா ஜும்ஆப் பள்ளியின் பக்கமாக இருந்து காதுகள் சிதையும் வண்ணம் துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் பயங்கரமாகக் கேட்கின்றன.
பயமும் அதிர்ச்சியும் அடைந்த நாமிருவரும் பரீனா ராத்தவின் வீடு அமைந்திருக்கின்ற மோதினார் லேனும் பள்ளி(ஸாவியா) ரோட்டும் சந்திக்கின்ற அவ்விடத்திலேயே நகராமல் நிற்கின்றோம்.
பள்ளிக்குள் புலிகள் புகுந்து விட்டார்கள் போல, இஷாத் தொழுபவர்களை சுடுகிறார்கள் என நினைக்கிறேன் என்று உடனே கூறுகிறார் நண்பர் ஜுனைதீன்.
பெரும் பீதியாக இருக்கிறது. பள்ளிக்குப் போகக்கூடிய சாதகமான சூழ்நிலை இல்லை. இரண்டொரு நிமிடங்களில் சைக்கிளை எடுத்துக் கொண்டு, மெத்தைப் பள்ளிக்குப் போய் விசயத்தைத் தெரிவிப்போம் என்று இருவரும் மோதினார் லேனால் செல்கிறோம்.
ரஸாக்கியா ரைஸ் மில் ரசாக் ஹாஜியாரின் வீடு அமைந்திருக்கும் அந்தச் சந்தியில் சிலர் எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். விடுதலைப் புலிகள் பள்ளிக்குள் புகுந்து தொழுது கொண்டிருப்பவர்களை சுடுவதாகவும் பள்ளியைச் சுற்றியுள்ள இடமெல்லாம் ஆயுதத்தோடு புலிகள் பதுங்கி நின்று கொண்டிருப்பதாகவும் போனால் சுட்டு விடுவார்கள் என்றும் பயங்காட்டிவிட்டு அவர்களும் அவ்விடத்தை விட்டு ஓடிப் போய் விடுகிறார்கள்.
ஆனால் இச்சந்தர்ப்பத்தில் துப்பாக்கிகளின் சுடும் சத்தம் கொஞ்சம் ஒய்ந்த்திருந்தது . நானும் ஜுனைதீனும் ஒரு முடிவுக்கு வந்து, வருவது வரட்டும் பள்ளிக்கே போவோம் என்று சைக்கிளை அவ்விடத்திலேயே போட்டு விட்டு பள்ளியை நோக்கி ஓடுகிறோம். கொஞ்சம் தூரம் வந்துவிடுகிறோம். இப்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் பயங்கரமாகக் கேட்கிறது. இடைநடுவில் எங்களைக் காணும் முன்னாள் ஊர்க்காவல் படை முகைதீன் நானா எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்.
துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுகள் என்பன வெடித்து பள்ளி வாயால் நொறுங்கிச் சிதைவதுபோல் அதிர்கின்றது. பேரச்சமாக இருந்த படியால் பள்ளி வாயலின் முன்னாலுள்ள ரோட்டில் யூசுப் ஆசிரியன் வீட்டின் பின்புறமாக ஒதுங்கிக் கொள்கிறோம்.
சில நிமிடங்கள் கழித்து ஆயுதங்களின் சத்தம் ஒய்கிறது. நான் ரோட்டுக்கு வந்து யூசுப் ஆசிரியரின் மதில் ஓரமாக நின்று பள்ளியை பார்க்கிறேன். ஆட்கள் யாரும் கண்களுக்குத் தென்படவில்லை. ஜுனைதீனும் நானுமாக பள்ளியை நோக்கி ஓடுகிறோம்.
உள்ளே வந்து விட்டோம். இச்சமயம் கோழைக் கொலையாளிகள் தப்பி ஓடியிருந்தார்கள். பள்ளிக்குள்ளிருந்து மரண ஓலங்கள், அழு குரல்கள் மாத்திரமே வெளிக் கிளம்புகின்றன. ஆட்களின் நடமாட்டமே இல்லை. பக்கத்து வீதிகளிலிருந்து ஒருவர் இருவராக பள்ளியை நோக்கி ஓடி வருகிறார்கள்.
நானும் ஜுனைதீனும் பள்ளி வாயளுக்குள் நுழைகிறோம். இரத்த வாடையில் மூக்கு நனைகிறது. குருதியால் குளிப்பாட்டியது போல் மரணித்த உடல்கள் அங்கச்சிதைவுகளுடன் காட்சியளிக்கின்றன. தரை எங்கும் செங்குருதி ஓடிக் கசிந்திருக்கிறது. மனித சதைத் துண்டுகள் சுவர்களிலும் தூண்களிலும் அப்பிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் பெயரை உச்சரித்தவாறும் முணங்கியவாறும் எழுந்திருக்க முடியாதவாறு படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் உதவி கோருகிறார்கள். சிலர் சிதைந்த கால்களோடும் கைகளோடும் சுவரைப் பிடித்த வண்ணம் தாமாகவே வெளியேறத் துடிக்கிறார்கள்.
இப்போது பள்ளியை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது.
ஜுனைதீனின் வாப்பாவும் ஜவ்பர்கானின் வாப்பாவும் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கி ஷஹீதாகிக் காணப்படுகிறார்கள். ஜுனைதீனின் இளைய நானாஅக்பர் காயங்களோடு அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். எங்களோடு பேசிக் கொண்டிருந்த ஆரிபும் ஷஹீதாகியிருக்கிறார்.
படுகாயங்களுக்குள்ளான ஒரு சகோதரரை நானும் இன்னொருவருமாக சேர்ந்து தூக்கி எடுக்க முயற்சிக்கிறோம். ”அன்ஸார்…அன்ஸார்…” என்று என்னை ஒருவர் அழுகுரலில் அழைக்கிறார்.
திரும்பிப் பார்க்கிறேன், எனது டெல்டா மாமா. (உம்மாவின் மூத்த சகோதரர். கூட்டுறவுப் பரிசோதகர் கலீலுர் ரஹ்மானின் வாப்பா ) இரத்தத்தால் நனைந்து தொப்பாகி இருக்கிறார். ஓடிச்சென்று பார்க்கிறேன். படுகாயங்களோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நான் கலங்கிப் போகிறேன். இப்போது ஆட்களின் எண்ணிக்கை பள்ளிக்குள் அதிகரித்து கதறலும் அழுகையுமாக சோக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மெளத்தாகியவர்களையும், காயமடைந்தவர்களையும் கண்ட உறவினர்கள் வாப்பா- மகனே- நானா- தம்பி- மாமா- மச்சான் என்று கதறி அழுதவாறு அவரவர் சொந்தங்களை மடியில் சுமந்த வாறும் தோள்களில் தாங்கிய வாறும் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்.
நான் காயமடைந்த மாமாவை அவரது சைக்கிளிலேயே வைத்து தள்ளிக்கொண்டு கபுறடிவீதியில் உள்ள எனது வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன்.
ஜுனைதீன் காயமடைந்த அவரது இளைய சகோதரரை சுமந்து கொண்டு அவரது வீட்டுப்பக்கம் ஓடுகிறார்.
நான் வீட்டை அடைந்து சிறிது நேரத்தில் மெத்தைப் பள்ளியில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஓர் அறிவிப்பு சொல்லப்படுகிறது. சுடப்பட்ட பள்ளியில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட காயம் அடைந்தவர்களை உடனடியாக மெத்தைப் பள்ளிக்கு கொண்டுவருமாறு அந்த அவசர அறிவிப்பு இருந்தது.
நான் மாமாவை மீண்டும் சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு மெத்தைப் பள்ளிக்குப் போகிறேன்.
ஊர் வைத்தியர்கள், தாதிமார், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக சேவை அமைப்புகளின் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் இயந்திரங்கள் போன்று அவசர உதவிகள் செய்வதில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
என்னிடமிருந்து மாமாவை மர்ஹூம் மஹ்பூப் டாக்டர் அவர்கள் அவரது கைகளாலேயே தூக்கி எடுத்துக் கொண்டு போய் அவசர முதலுதவிகளைச் செய்துவிட்டு என்னைபக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நண்பரொருவர், மீரா ஜும்ஆப் பள்ளியில் மாத்திரமல்ல ஹுசைனியாப் பள்ளியிலும் ஜின்னா ஹாஜியாரின் வீட்டிலுமாக மூன்று இடங்களிலும் ஒரே நேர அளவில் புலிகள் கொலை வெறி யாடியிருக்கிறார்கள் என்ற தகவலைச் சொல்லுகிறார்.
நான் மாமாவுக்கும், அருகில் காயம் அடைந்திருந்த இன்னுமொரு சகோதரருக்கும் உதவியாக இருக்கிறேன். மர்ஹூம் மஹ்பூப் டாக்டர் அவர்கள் என்னிடம் வந்து “மாமாவுக்கு சீரியசாக இருக்கு, இங்கு வைத்திருக்க முடியாது ஹெலிகொப்டரில் பொலன்னறுவ ஹொஸ்பிடளுக்கு அனுப்ப வேண்டும்,ரெடியாகுங்க” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
சிறிது நேரத்தில் காயப்பட்டவர்களை வாகனமொன்றில் ஏற்றி ஹெலியில் அனுப்புவதற்காக எடுத்துச் செல்கிறார்கள். வாகனத்தில் இடம் போதாமையினால் என்னால் போகமுடியவில்லை. நான் மெத்தைப் பள்ளியிலேயே இருந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு உதவியாக செயற்படுகிறேன்.
இப்போது மறு நாள் அதிகாலை 03.45 மணி.
எனது பெரியப்பாவின் மகன் கரீம் நானா என்னைக் காணுகிறார். நான் வீட்டுக்கு போகவில்லை என்று எனது உம்மா என்னைத்தேடி அழுது கொண்டிருப்பதாகவும் உடன் வீட்டுக்குச் செல்லுமாறும் கூற, நான் வீட்டுக்குச் செல்கிறேன். ஆனால் நான் மெத்தைப் பள்ளியில் இருக்கும் விடயம் வேறொருவர் மூலம் உம்மாவுக்கு பின்னர் அறியக் கிடைத்திருந்ததால் நான் வீட்டுக்குச் செல்லும் போது உம்மா ஆறுதல் அடைந்திருந்தா.
இரத்தக் கறைகள் படிந்திருந்த சேட்டையும் சாரனையும் கழற்றி கழுவுவதற்கு போட்டுவிட்டு குளித்துவிட்டு மீண்டும் மெத்தைப் பள்ளிக்குச் சென்று அங்கு ஜனாஸாக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன் இணைந்து கொள்ளுகிறேன்.
இப்படியாக மீரா ஜும்ஆப் பள்ளி வாயலிலும் ஹுசைனியா பள்ளியிலும் ஷகீதாக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி கபனிடும் பணிகளும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் படுகாயமடைந்தவர்களை வெளியூர் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதுமான செயற்பாடுகளும் இடம் பெறுகின்றன.
இரண்டு பள்ளிகளிலும் விடுதலைப் புலிகளின் கோர கொலை வெறித் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 103 ஆகும்.
மீரா ஜும்ஆப் பள்ளி வாயலின் மையவாடியில் நீளமான அமைப்பில் ஒரே ஒரு கப்று தோண்டப் படுகிறது. நூற்றி மூன்று ஜனாஸாக்களும் அதில் நல்லடக்கம் செய்யப் படுகின்றன.
காத்தான்குடி தாங்கொண்ணாத் துயரத்தில் மூழ்கித் தவிக்கிறது. மேகங்கள் கறுப்பாடை அணிந்து துயரம் தாங்காமல் நகர்ந்து செல்கின்றன. வானம் கண்ணீர் சிந்தி தேம்பித்தேம்பி அழுகிறது.
பொழுது பட்டதிலிருந்து இரவின் நிறம் சிவப்பாகி விடுகிறது.
இணைந்திருங்கள்