கொவிட் -19 தொற்றின் நான்காவது அலையின் நுழைவாயிலில் இலங்கை நிற்கின்றதா? அல்லது, ஏற்கெனவே அதற்குள் புகுந்துவிட்டதா என்பது, புரியாத புதிராக இருக்கிறது.
ஏனெனில், குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், கடந்த ஒரு வார காலமாக, வேகமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நாம் ஏற்கெனவே நான்காம் அலையில் நுழைந்துவிட்டோம் என்றே தெரிகிறது. ஆனால், அதைப் பற்றி எவரும் பேசுவதில்லை.
இன்னுமொரு வகையில், தற்போது சுகாதாரத் துறையினர் வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள், உண்மையானவையா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில், புள்ளிவிவரங்கள் மூலம் தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிய வந்தபோதிலும், தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை, அரசாங்கம் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், மேலும் தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வீடுகளில் இருந்து கடமையாற்றியவர்கள் உள்ளிட்ட சகல அரச ஊழியர்களும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், அலுவலகங்களுக்குச் சென்று கடமையாற்ற வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் பொதுப் போக்குவரத்து சேவைகளும் நடைபெறுகின்றன.
இலங்கையில், கொவிட்- 19 மூன்றாவது அலை, கடந்த தமிழ்- சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்தே ஆரம்பமானது. புத்தாண்டு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால், சமூக நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என, சுகாதாரத் துறையினர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அது ‘ஜனரஞ்சக முடிவு’ அல்ல; கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த ஆலோசனையை அரசாங்கம் புறக்கணித்து இருந்தது.
அதன்விளைவாக, ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து, தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தது. நாளொன்றுக்கு 3,500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி, முன்னரை விட இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க, அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் விளைவாக, ஜூலை மாதம் ஆரம்பத்தில், நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை 1,500 வரை குறைந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அவ்வளவாகக் குறையவில்லை. நாளாந்த நோயாளர் எண்ணிக்கை பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் தங்கியிருப்பதால், அதன் மூலம் நாட்டின் கொவிட்-19 நோயின் உண்மையான நிலைமையை அறிய முடியாது. பரிசோதனைகள் குறைந்தால், நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். மரணங்களின் எண்ணிக்கை, நாட்டில் கொவிட்- 19 நோயின் உண்மையான நிலைமையை அறிய, அதைவிடப் பொருத்தமான அளவீடாகும்; அது அவ்வளவாகக் குறையவில்லை.
இந்தநிலையில், அரசாங்கத்தின் தலைவர்களின் கருத்துப்படி, சுகாதார அமைச்சு சுகாதார கட்டுப்பாடுகளை வெகுவாகக் குறைத்தது. கடைகள், பஸ், ரயில், வீதியோர சந்தைகள், சமய வழிபாட்டுத்தலங்கள் மடடுமன்றி மஸாஜ் கிளினிக்குகள் போன்றவையும் இயங்க அனுமதிக்கப்பட்டன.
இது ஆபத்தான முடிவு என, அப்போதே இலங்கை மருத்துவ சங்கம், சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் எடுத்துக் காட்டிய போதிலும் அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. விளைவு, எதிர்பார்த்ததைப் போலவே இருக்கிறது.
இப்போது நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, மீண்டும் 2,500 தாண்டும் நிலையில் இருக்கிறது. 10 நாள்களுக்கு முன்னர், அது 1,600ஆகவே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை (01) வெளியான கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 67ஆக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை, இது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும். ஒரு வாரத்துக்கு முன்னர், அந்த எண்ணிக்கை 45 ஆகவே இருந்தது.
இந்தப் பின்னணியில் தான், மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில், சகல அரச ஊழியர்களும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், அலுவலகங்களிலேயே கடமையாற்ற வேண்டும் என, அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளது. அத்தோடு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையும் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல், பல்வேறு மட்டத்திலான கட்டுப்பாடுகளை, அடிக்கடி விதித்ததன் காரணமாக, வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்தித்தே, அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கொவிட்-19 முதலாவது அலையின் போது, பொருளாதாரப் பாதிப்பைப் பற்றிச் சிந்தித்து, பாரிய வியாபார நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்காததன் விளைவாக, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம், மோசமான இரண்டாவது அலை உருவாகியது. அதனால், முன்னரை விடப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.
இரண்டாவது அலையின் போதும், பொருளாதார பாதிப்பைப் பற்றிச் சிந்தித்து, சித்திரை புதுவருடப் பிறப்புக் காலத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க, அரசாங்கம் முன்வரவில்லை. அதன் விளைவாக, இரண்டாவது அலையை விட, மிகவும் மோசமான மூன்றாவது அலையை நாடு உருவாக்கிக் கொண்டது. அதனால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பாதிப்பு நாட்டுக்கு ஏற்பட்டது.
சுருக்கமாக, அரசாங்கம் சிறிய நட்டத்தைப் பற்றிச் சிந்தித்து, பெரிய நட்டமொன்றை உருவாக்கிக் கொள்கிறது. அவ்வாறான நிலையில்தான், தற்போது அரச அலுவலகங்கள் முற்றாகத் திறக்கப்பட்டுள்ளன. மிக வேகமாகப் பரவும் அதேவேளை, கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 நோயின் டீ.1.617.2 அல்லது ‘டெல்டா’ என்ற திரிபு, நாட்டில் பரவி வரும் நிலையிலேயே, அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தத் திரிபு, எதிர்வரும் மாதங்களில் உலகெங்கும் மிகவேகமாகப் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பரவும் வேகம் மட்டுமன்றி, அதன் தாக்கமும் அதிகம் என அந்நிறுவனம் கூறுகிறது.
ஏனைய திரிபுகளோடு ஒப்பிடுகையில், ‘டெல்டா’ திரிபு தாக்கியவர்கள், மருத்துவமனைகளை நாடும் அளவு 120 சதவீதத்தால் அதிகம் என்றும் அவசர சிகிச்சை பெறும் நிலை 287 சதவீதம் அதிகம் என்றும் மரணங்கள் 137 சதவீதம் அதிகம் என்றும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே, ‘டெல்டா’ திரிபு உலகில் சில நாடுகளில் காணப்பட்ட போதிலும், அண்மைய மாதங்களில் இந்தியா, அவுஸ்திரேலியா, வங்காளதேசம், சீனா, டென்மார்க், இந்தோனேசியா, ரஷ்யா, சிங்கப்பூர், ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் புதிய தொற்றாளர்களில் 80 சதவீதமானோரை அது தாக்கியுள்ளதாக, அந்நாட்டின் பிரதான நோய் தடுப்பு மையம் கூறுகிறது. கடந்த ஜூன் 19 ஆம் திகதிக்கும் ஜூலை 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவில் தொற்றாளர் எண்ணிக்கை 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘டெல்டா’ வைரஸ் திரிபு, கொழும்பு மாவட்டத்தில் 20 முதல் 30 சதவீதமான மக்களிடையே பரவியிருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களிலும் அது பரவி இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வைரஸ் திரிபின் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் இலங்கை பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் நிலை உருவாகி இருப்பதாக, உலகப் புகழ் பெற்ற வைரஸ் விஞ்ஞானி பேராசிரியர் மலிக் பீரிஸ் சனிக்கிழமை (31) தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சகல அரச ஊழியர்களையும் வேலைக்கு அழைக்கும் போது, தற்போது மும்முரமாக இயங்கி வரும் தடுப்புசி திட்டத்தின் மீதே, அரசாங்கம் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், அமெரிக்கா, ஐரோப்பா விஞ்ஞானிகள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்த்தால், தடுப்பூசியின் மீதும் எவ்வளவு காலம் நம்பிக்கை வைத்திருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், தடுப்பூசியின் செயற்றிறனை மீறிச்செல்லக் கூடிய, புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகும் நிலை காணப்படுவதாக, அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசங்களை அணியத் தேவையில்லை என முன்னர் அறிவித்து இருந்த அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அவர்களும் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என, சனிக்கிழமை (31) ஆலோசனை வழங்கியது. இந்த நிலைமை இலங்கையில் ஏற்பட்டால், ஏற்கெனவே பொருளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு, எவ்வாறு அதை எதிர்நோக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாதுள்ளது.
இணைந்திருங்கள்