கொவிட்-19 இன் தோற்றம் பற்றி ஆய்வில் விஞ்ஞானத்தினை நம்புங்கள் அரசியலை நிராகரியுங்கள் என, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ செங்ஹாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியல் ரீதியில் சீனாவுக்கு எதிராக முன்னெடுத்து வரும் எதிரொலியின் காரணமாகவே, சீனா மீது எவ்வித விஞ்ஞான அடிப்படையுமின்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு விஞ்ஞானம் சார்ந்த விடயம், இது தொற்றுநோயைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் 90 நாட்களுக்குள் கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வறிக்கையினை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டுப் புலனாய்வுத்துறையினருக்கு மே மாத இறுதியில் ஆணையிட்டார்.  மேலும் சீனாவின் மீது “முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று வெளிப்படையாக அழுத்தம் கொடுத்தார். இத்தகைய அரசியல் திரிபுபடுத்தலும் குறி வைக்கப்பட்ட நாட்டிற்கு எதிரான குற்றத்தின் அனுமானமும் விஞ்ஞான ரீதியான பொது அறிவினை மட்டுமல்லாமல் சர்வதேச சமத்துவத்தையும் நீதியையும் மீறுவதாக உள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்திப்பது உறுதி.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சீனாவின் முன்னணி நிபுணர்கள் இணைந்து சீனாவில் கொவிட்-19 இன் தோற்றம் பற்றி கூட்டு ஆய்வினை நடத்தினர்.

28 நாட்கள் நீடித்த ஆய்வின் போது நிபுணர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அங்கு சென்று அவர்கள் யாரை சந்திக்க விரும்புகிறார்களோ அவர்களையும் சந்தித்தனர். “ஆய்வகத்திலிருந்து கசிவு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு” மற்றும் “ஆரம்ப இரத்த மாதிரிகளை உலகளவில் தேடிபார்ப்பது அவசியம்” உள்ளிட்ட முடிவுகள் WHOவினால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சர்வதேச ஆய்வுகள் ஆழமாகவும் விரிவாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சீனாவின் வூஹானில் பதிவாகுவதற்கு முன்னதாகவே உள்ள மாதிரிகளில் SARS-CoV-2 வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது. மிலன் பல்கலைக்கழகம் மற்றும் மெமோரியல் பல்கலைக்கழகம் ஆப் நியூபவுண்ட்லண்ட் (Newfoundland) 2021ஆம் ஆண்டு  ஆகஸ்ட்  6ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, 2019 செப்டெம்பரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் SARS-CoV-2 வைரஸ் உள்ளது. இது சீனாவில் பரவுவதற்கு மிக முன்னதானது என்பது குறிப்பிடத்தக்கது.  உலகளவில் மேலும் விரிவான முறையிலும் மேலும் முன்னதாகவும் வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பது மிக அவசியம் என்பதை இது காட்டுகின்றது.

ஊக்கமளிக்கும் விதமாக, வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வில் அமெரிக்காவின் அரசியல் நோக்கம் சர்வதேச சமூகத்தில் பரவலான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

அண்மையில், இலங்கை உட்பட 76 நாடுகள் வைரஸ் தோற்றம் ஆய்வை அரசியலாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் WHO பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதங்களை அனுப்பி அல்லது அறிக்கைகளை வெளியிட்டன. இவற்றில் WHO – சீனா கூட்டு ஆய்வறிக்கையினை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டன.

இதற்கு மேலதிகமாக பல விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், ஊடக வல்லுநர்கள் மற்றும் அமைப்புகள் பல தளங்களில் இந்த நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதி ஷி ச்சின்பிங்குடனான தனது இரண்டு தொலைபேசி உரையாடல்களில் கொவிட்-19 தொற்றுநோயை அரசியலாக்குவதற்கும் களங்கப்படுத்துவதற்கும் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி என்னுடன் நடத்திய சந்திப்பில், வைரஸ் தோற்றம் ஆய்வு குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். கொவிட்-19 மீதான அரசியல் திரிபுபடுத்தல் எந்த நன்மையையும் செய்யாது, ஆனால் தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிப்பதற்கான அனைத்து நாடுகளின் முயற்சிகளையும் தடுக்கும் என்பதை சீனாவும் இலங்கையும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புலனாய்வுத்துறையின் புகழ் மங்கத்தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அவர்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் என்பன  மக்கள் மத்தியில் அடிக்கடி நம்பிக்கையிழக்கும் நிலையில் உள்ளது. முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளரும், CIAவின் முன்னாள் பணிப்பாளருமான மைக் பொம்பியோ, “நாங்கள் பொய் சொன்னோம், ஏமாற்றினோம், திருடினோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டில், ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றது என்றும் அதற்கு சான்றாக அதன் புலனாய்வுத்துறையினால் வழங்கப்பட்ட சான்று சலவைத்தூள் நிறைந்த குழாயினை வைத்திருப்பது போன்றதாக அமைந்நதிருந்தது. பின்னர் இறையாண்மை கொண்ட ஈராக்கிற்குப் படையினரை அனுப்பியது. ஈராக் போர் சுமார் இரு இலட்சம் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.

இதுவரையிலும் போர் எனும் பேய் அங்கு தொடர்ந்தும் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது. CIA வழங்கவுள்ள வைரஸ் தோற்றம் ஆய்வு அறிக்கை ஆனது, “கொவிட் புலனாய்வு நாடகம்” எனத் தெரியவரவுள்ளதோடு, அது இறுதியில் ஒரு வெற்றுக் காகிதமாக மாறப்போவது என்பதில் ஐயமில்லை. காபூலில் இருந்து அவசரமாகவும் பீதியுடனும் விலகிய அமெரிக்காவின் தீர்மானம் போன்ற, ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மையைப் போலவே, அமெரிக்க உளவுத்துறையால் புனையப்பட்ட இந்த அறிக்கை மீண்டும் ஒரு வெற்றுக் காகிதமாக மாறுறப் போகின்றது என்பதே உண்மை.