சிறுபான்மையினர் சுயமரியாதையுடன்  வாழ்வதற்கு வழியேற்படுத்தப்படுவது அவசியம்

இந்தியப் பிரதமருக்கு கையளிக்கவென  தமிழ்க் கட்சிகள் தயாரித்துள்ள ஆவணம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவென தமிழ் அரசியல் கட்சிகள் தயாரித்துள்ள ஆவணத்தில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து தற்போது விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள இந்த ஆவணம் ஜனவரி 11ஆம் திகதி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்படவுள்ளது.

1997 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வரும் இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று இந்த ஆவணத்தில் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டின் கீழ் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடப் பிரதேசங்களில் கெளரவமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழவும், அவர்கள் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கவும் வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள், இந்தியப் பிரதமரிடம் கோரியுள்ளன.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள ஆவணத்தின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு:

1) இந்திய_இலங்கை உடன்படிக்கையின் கீழ் நடைமுறைக்கு வந்த பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளிலிருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு, நிதி, நிலம், கல்வி, கமநல சேவைகள் போன்றவை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழிவகை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோர வேண்டும்.

2) பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே 1988 டிசம்பர் 17 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பதினாறாவது திருத்தத்தின் ஏற்பாடுகள் வார்த்தையிலும், உணர்விலும் செயற்படுத்தப்பட வேண்டும். பதின்மூன்றாவது மற்றும் பதினாறாவது திருத்தங்களில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தேசிய மொழிகளாகவும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் அங்கீகரிப்பதுடன், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் அரசாங்கப் பாவனைக்கான மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி தேசிய மொழிகள், நிர்வாகம், சட்டம், நீதித்துறை மற்றும் பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஊடகம் ஆகியவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3) பண்டா_செல்வா ஒப்பந்தம் (1957), டட்லிசெல்வா ஒப்பந்தம் (1965) மற்றும் இந்திய_இலங்கை ஒப்பந்தம் (1987) ஆகியவற்றின் விதிகளுக்கு மாறாகச் செயற்படும், வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள் தொகை அமைப்பை முறையாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் உடனே நிறுத்தப்படவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் வரலாற்று வாழ்விடங்களை அழிக்கும், தொல்பொருள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, வனத் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், சுற்றுலா சபை மற்றும் பாதுகாப்பு/உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் முயற்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தொல்பொருள் திணைக்களமானது பெளத்த சமய காலத்திற்கு முற்பட்ட தமிழர்களின் தொன்மையை அங்கீகரித்து, இலங்கையில் பெளத்தத்தை (தமிழ் பெளத்தர்கள்) ஏற்றவர்கள் தமிழர்கள் என்பதை ஏற்று, வரலாற்றை சிதைக்காமல் அதன்படி செயற்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் உள்ள எல்லைப் பகுதிகளிலுள்ள தமிழ்க் கிராமங்களை சிங்களப் பகுதிகளுடன் இணைத்து அல்லது சிங்களக் கிராமங்களை தமிழ் பகுதிகளுக்குள் கொண்டு வருவதன் மூலம் தமிழர்களை அவர்களது சொந்தப் பகுதிகளில் சிறுபான்மையினராக்கும் வகையில் இன அமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம் உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதை தடுக்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

4) நேருகொத்தலாவல (1954), சிறிமாவோசாஸ்திரி (1964) மற்றும் சிறிமாவோ இந்திரா (1974) ஆகிய இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான ஒப்பந்தங்களின் நோக்கம் மற்றும் உணர்வு, இவை இரண்டும் உறுதி செய்யப்படவேண்டும்.

நில உரிமை, வீட்டு உரிமை, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய துறைகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் பாரபட்சமாக மீறப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன. சம உரிமைகள் மற்றும் பாகுபாடுகளின் இந்த மறுப்பு, முழு அளவிலான சம குடியுரிமையை நோக்கி உடனடியாக மாறவேண்டும்.

5)முக்கியமாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

6) இலங்கைத் தீவில் பரவலாக உள்ள பல கட்சி ஜனநாயக கட்டமைப்பிற்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது வேறு சிறுபான்மையினராக சிதறி வாழும் இன மற்றும் அரசியல் தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை பெறும் நோக்கில், அத்தகைய ஆர்வமுள்ள குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்றம் அல்லது மாகாண சபைகளுக்குள் நுழைய முடியும். எனவே விகிதாசார பிரதிநிதித்துவ முறையானது தேர்தலில் தொடர வேண்டும் மற்றும் அந்த முறையை இலங்கை அரசாங்கம் தனது தேர்தல் முறையில் ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட வேண்டும்.

7) “ஒரு நாடு ஒரே சட்டம்” பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய அரசாங்கத்தைத் தவிர நாட்டிற்குள் வேறு எந்த சட்டமியற்றும் அமைப்புகளையும் இல்லாதொழிக்கவும் அல்லது தடுக்கவும் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைத் தடுக்கவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களின் சம்பிரதாய சட்டங்களை கடைப்பிடிப்பதையும், அவர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பாதுகாப்பதையும் இது தடுக்கும்.

எனவே, ஆணைக்குழு அகற்றப்பட வேண்டும் மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளமும், உரிமைகளும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த ஆவணத்தில் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்திய 1993 இல், ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் யோசனைகள்.

1) ஒற்றையாட்சி அமைப்பைக் கைவிட்ட ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கீழ் 1995 மற்றும் 1997 இல் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான அரசாங்க முன்மொழிவுகள்.

2) சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வை ஆராய்வதற்கு கட்சிகள் ஒப்புக்கொண்ட 2002 டிசம்பரில், ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை.

3) 2006 இல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை உருவாக்க நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை போன்ற முயற்சிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த ஆவணத்தில்

1. ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர்_ தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA)

2. மாவை சேனாதிராஜா, தலைவர், இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK.)

3. நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், தமிழ் மக்கள் கூட்டணி (TPA)

4. ஏ.அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், தமிழீழ விடுதலை அமைப்பு (TELO)

5. தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF/PLOTE)

6. கே.பிரேமசந்திரன், தலைவர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF).

7. என்.ஸ்ரீகாந்தா, தலைவர், தமிழரசுக் கட்சி(TNP)

ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.