அ.குமரேசன்

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாவது அலை நாடு முழுவதும் ஒரு பெருந்துயரத்தைப் பதித்திருப்பது ஒருபுறம். மூன்றாவது அலை பற்றிய முன் தகவல்கள் ஏற்படுத்தும் கவலைகள் இன்னொருபுறம்.

மூன்றாவது அலை வருமானால் அது முதலிரண்டு அலைகளை விடவும் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. முதலாவது அலையில் பெருமளவுக்கு வயதானவர்கள்தான் இறப்பு உள்ளிட்ட கடும் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள், இரண்டாவது அலை பெருமளவுக்கு இளைஞர்களைக் குறிவைத்தது, மூன்றாவது அலை குழந்தைகளைப் புரட்டியடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குழந்தைகள் உள்ள குடும்பங்களில் ஒரு மௌனக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உற்றாரைக்கூட வீட்டுக்குள் வரவிடுவதில் தயக்கம் காட்டுவது முதல், அவரவர் கடவுளுக்கு நேர்ந்துகொள்வது வரையில் அந்தக் கலக்கமே உறைந்திருக்கிறது.

கொரோனா பதற்றங்கள் சென்றடைகிற அளவுக்கு அறிவியல் விளக்கங்கள் பரவலாகச் சென்றடையாதது இதற்கொரு முக்கிய காரணம். இந்த நிலையில், அரசு தனது பரப்புரை எந்திரங்களின் பலத்தோடு கொண்டுசெல்ல வேண்டிய முயற்சியை, அறிவியல் ஒரு மக்கள் இயக்கமாக வேண்டுமென்ற அக்கறை உள்ளவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக “அறிவியலால் இணைவோம் – கொரோனாவை வெல்வோம்” என்ற நிகழ்ச்சியை இணையவழிச் சந்திப்பாக நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் 15ஆவது அமர்வு ஜூன் 27 அன்று நடைபெற்றது. பேராசிரியர் சாந்தி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு பல்வேறு ஐயங்களைத் தெளிவிப்பதாக இருந்தது.

சேலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் திருநாவுக்கரசு அன்றைய தேதி வரையிலான நிலவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்தார். அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை அடிப்படையாகக்கொண்ட அந்தத் தகவல்கள், ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்த பொது சுகாதாரக் கட்டமைப்புகளின் பங்களிப்பால் நாடு முழுக்கக் கொரோனா இரண்டாவது அலை மட்டுப்பட்டிருக்கிறது என்ற செய்தியை உறுதிப்படுத்தின.

முன்னர் தடுப்பூசித் தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களே பெரும்பங்காற்றி, பல்வேறு தொற்றுகள் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டதையும், இன்று தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையின் சவாலையும் அவர் ஒப்பிட்டுக் காட்டினார். பொதுத்துறைகளின் உண்மை உரிமையாளர்களாகிய பொதுமக்கள் கவனத்தில் கொள்வார்களானால், எங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை முடக்கி, எவருக்கோ வணிக வேட்டைக் களத்தை ஏற்படுத்தித் தருவதா என்று குமுறுவார்கள்.

டி.வி.வெங்கடேஸ்வரன்

நான்கு அலைகள்!

முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற, டெல்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை அறிவியலாளரும், பல்வேறு பத்திரிகைகளில் அறிவியல் புரிதலுக்கான எளிய கட்டுரைகளை எழுதி வருகிறவருமான டி.வி.வெங்கடேஸ்வரன், “உலக அளவில் பல நாடுகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அலைகளைச் சந்தித்த பிறகுதான் தொற்றுப் பரவல் இறங்குமுகமாகியிருக்கிறது” என்று தொடங்கினார்.

“அமெரிக்காவில் நான்காவது அலைக்குப் பிறகுதான், தடுப்பூசிகளின் பலனாக மட்டுப்படத் தொடங்கியிருக்கிறது. பிரிட்டனில் மூன்றாவதற்குப் பிறகு புதிய அலை ஏற்படவில்லை. பிரேசிலில் பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி அனைத்திலும் அலட்சியமான வழிமுறைகளால் ஏறுமுகமாக இருக்கிறது. சீனாவிலும் நியூசிலாந்திலும் முதலில் ஏற்பட்டதற்குப் பிறகு வேறு அலை என்பதே இல்லை. அதற்கு காரணம், பொது முடக்கத்தை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல், தீவிரமான பரிசோதனைகள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுதான். எங்கும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, சாலையில் போகிறவர்களைக்கூட அழைத்துப் பரிசோதனைகள் நடத்துவது, தொற்று உறுதியானால் உடனடியாக மருத்துவமனை அனுமதி, சாதாரண நிலையில் தொற்று இருக்குமானால் வீட்டிலேயே தனிமைப்படுத்தல், அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று தொற்றின் பரவல் வாய்ப்பை அந்த நாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கின்றன” என்றார் அவர்.

நமது நாட்டில், நம் குடும்ப அமைப்பின் காரணமாக பலரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிற சூழல் எங்கும் இருக்கிறது. ஆகவே, வீட்டிலேயே தனிமைப்படுத்துவது பல குடும்பங்களில் சாத்தியமில்லை. அந்த நிலையில், உரிய வசதிகளோடும் ஊழியர் ஏற்பாடுகளோடும் பொதுவான தனிமைப்படுத்தல் கூடங்களைப் பரவலாக ஏற்படுத்துவதே சிறப்பாகப் பலனளிக்கும் என்றும் கூறினார். ஒன்றிய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டிய திட்டம்.

இந்தியாவில் இன்று நிலவுவது இரண்டாவது அலை என்று பொதுவாகச் சொல்கிறோம் என்றாலும், ஏற்கெனவே மூன்றாவது, நான்காவது அலைகள் வந்துவிட்டன என்று சொல்லி அதிர்வலையை ஏற்படுத்திய டி.வி.வி, “தில்லியில் தற்போது ஏற்பட்டிருப்பது நான்காவது அலை. பரீதாபாத், தானே பகுதிகளிலும் நான்காவது அலைதான். இந்தூர் வட்டாரத்தில் ஐந்தாவது அலை. தமிழகத்தில் பொதுவாக இரண்டாவது அலை என்றாலும், (தொற்றுசார்ந்த நுட்பப்படி) டெக்னிக்கலாகப் பார்த்தால் சென்னையில் ஏற்பட்டிருப்பது மூன்றாவது அலைதான்” என்று விளக்கினார்.

பொதுமக்கள் பொதுமுடக்கத் தளர்வுகளின்போது கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் வெளியே நடமாடுவது அடுத்தடுத்த அலைகளுக்கு ஒரு காரணமா? ஆகவேதான் இரண்டாவது அலை, முதலாவது அலையைவிடக் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியதா? முதலாவது அலையில் மூத்தவர்களும் இரண்டாவதில் இளையவர்களும் தாக்கப்பட்டது போல மூன்றாவதில் குழந்தைகள் தாக்கப்படுவார்களா? அடுத்தடுத்துப் பாய்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அறிவியலாளர், “பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட விரும்புவது இயல்பு. அவ்வாறு வெளிநடமாட்டம் அதிகரிக்கிறபோது அதோடு அலைகள் ஏற்படுவதென்பது இயல்பானதுதான்” என்றார்.

“முதலாம் அலை வயதில் பெரியவர்களையும் இரண்டாவது அலை இளைஞர்களையும் மிகுதியாகத் தாக்கியது போல ஒரு தோற்றம் இருக்கிறது. தோற்றம் வேறு, உண்மை வேறு. நோய் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் சற்று கூடுதலாக இருக்கின்றன. ஆனால் சதவிகிதக் கணக்கில் பார்த்தால் கிட்டத்தட்ட சம விகிதத்தில்தான் பாதிப்புகள் இருக்கின்றன. முதலாவது அலையில் 22 சதவிகிதப் பெரியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்றால், இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் ஏறக்குறைய அதே சதவிகிதத்தினர்தான். முதல் அலையில் கடும் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் 21 சதவிகிதம். இரண்டாவது அலையிலும் இதுவரையில் அநேகமாக அதே சதவிகிதம்தான். குழந்தைகளைப் பொறுத்தவரையில் முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்கள் 3 சதவிகிதம், இரண்டாவது அலையிலும் அதே விகிதம்தான். இறப்பு விகிதமும் இதே போன்றுதான் இருக்கிறது. மூன்றாவது அலை வருமானால் அப்போதும் பாதிப்பு இந்த விகிதத்தில்தான் இருக்கும். குழந்தைகள் அதிகமாகத் தாக்கப்படுவார்கள் என்பதற்கான அறிவியல் முகாந்திரம் எதுவும் இல்லை!”

அரசாங்க அமைப்புகளும் ஊடகங்களும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தியல்லவா இது! அவ்வாறு எடுத்துச் சொல்வது மக்களுக்கு அச்சத்தை நீக்கி நம்பிக்கையை வளர்க்கும், அவர்களின் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தும்.

பரிணாம மாற்றம்!

கிருமி உருமாற்றம் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உயிரினங்களின் உருமாற்றம் என்பது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக நடப்பதுதான். மனிதர்களே கூட நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல இப்போது இல்லை. உயரம், முகத்தோற்றம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படுவது உருமாற்றம்தான். அதே போலத்தான் கொரோனா கிருமிக்கும் நிகழ்கிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அதிகமாகக் கடத்தப்படுவது அதிகரிக்கிறபோதுதான் அது கவலைக்குரிய உருமாற்றமாகிறது. உடலுக்குள் ஒரு கொரோனா ஆயிரக்கணக்கான குட்டிகளைப் போடுகிறது. அவற்றில் பாதியளவுக்கு, மனிதர்கள் மூச்சு விடுகிறபோது, இருமுகிறபோது, தும்மும்போது, பேசும்போது வெளியேறி காற்றில் பரவுகிறது. அவ்வாறு வெளியேறுகிற கிருமிகள் குறுக்கிடுகிற நிறையப் பேரைத் தொற்றக்கூடும்.

தொற்றும் நோயும் ஒன்றல்ல. கிருமி தொற்றுகிறவர்கள் எல்லோரும் நோயாளிகளாகிவிட மாட்டார்கள். அவர்களில் சிலர்தான் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதுதான் கவலையளிக்கும் நிலை. சிகிச்சைகளில், தடுப்பூசி போடுவதில், பரிசோதனைகளில், செயல்திறனில் குறைபாடு ஏற்படுமானால் அதுவும் கவலையளிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லக் கூடும். அப்போது பிளாஸ்மா தெரபி போன்ற சிகிச்சைகளால் பலனில்லாமல் போகலாம், நிச்சயமாகத் தடுப்பூசியால் பலனில்லாமல் போகாது.

உரிய கால அளவுக்குள் எல்லோருக்கும் அல்லது ஆகப்பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவது முக்கியம். ஜூன் 27 நிலவரப்படி, ஜம்மு காஷ்மீரில் 91 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இமாசல பிரதேசத்தில் 90 சதவிகிதம் பேருக்கும், கேரளத்தில் 83 சதவிகிதத்தினருக்கும், திரிபுராவில் 80 சதவிகிதத்தினருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 34 சதவிகிதத்தினர்தான் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். மற்ற பல மாநிலங்களில் இதைவிடக் குறைவு. இந்த ஏற்றத்தாழ்வான நிலைமை சரி செய்யப்படுவதோடும் இணைந்ததுதான் கொரோனாவை வெல்லும் வழி.

அதை உறுதிப்படுத்த, தடுப்பூசி தயாரிப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவின் தேவைக்காக மட்டுமல்ல, உலகத்துக்கும் இந்தியா தனது பங்கைக் கொடுப்பதற்கு, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது கட்டாயத் தேவை என்றார் வெங்கடேஸ்வரன். இந்த இடத்தில்தான், உள்நாட்டில் தடுப்பு மருந்து உற்பத்தியில் பாரம்பரிய அனுபவமும், உள்கட்டமைப்பும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிடம் முழுமையாக கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியதாகிறது. தமிழகத்தின் செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையைத் தானே எடுத்து நடத்துவதாகத் தமிழக அரசு அறிவித்த பின்னும் ஒன்றிய அரசு மௌனமாக இருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கை மேலும் அழுத்தம் பெற வேண்டியதாகிறது.

அகப்படாத விடை!

உரையாடல் நேரத்தில் கேள்விகளை முன்வைத்த பலரும் மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்குமாமே என்ற கவலையை எதிரொலித்தார்கள். அந்தக் கவலையின் நியாயத்தை உணர்ந்தவராக, ஏற்கெனவே கூறிய புள்ளிவிவரத்தை நினைவுபடுத்தி, குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்றார். அத்துடன் ஒன்றைச் சொன்னார். “இதில் ஒரு மாறுபட்ட நிலையும் இருக்கிறது. பொதுவாக சுவாசப் பாதையோடு தொடர்புள்ள கிருமித் தொற்றுகள் ஏற்படுகிறபோது குழந்தைகள்தான் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். உலகம் முழுவதுமே கொரோனா தொற்றில் அவ்வாறு நிகழவில்லை. இது ஏன் என்று இன்னமும் தெரியவரவில்லை. தொடரும் ஆராய்ச்சிகளில் விடை கிடைக்கும்” என்றார் அறிவியலாளர் டிவிவி.

அறிவியலாக இனிமேல்தான் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்க வேண்டியதாக இருக்கலாம். ஆனால், தத்துவமாக இப்போதே எனக்கு ஒரு பதில் கிடைக்கிறது. “பெரியவர்கள் வர்க்கம், சாதி, மதம், இனம், பாலினம், எல்லை என்று பூமியைக் குதர்க்கமாகக் குதறிப்போட்டிருக்கிறீர்கள். ஆகவே, பெரியவர்கள் ஒழிந்துபோங்கள். பசங்கள் இந்தத் தொற்றுகள் இல்லாத தடுப்பூசி போடப்பட்ட தலைமுறைகளாக வளரட்டும்” என்று இயற்கைதான் முடிவெடுத்து இவ்வாறு செய்கிறதோ என்னவோ!