பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை செய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உட்பட மேற்கொண்டு தீர்மானித்தல் சம்பந்தமாக ஜனாதிபதியின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1979 இலக்கம் 48 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 13வது உறுப்புரையின்படி இந்தச் சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டப்பணிப்பாளர் ஜெனரல் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர கூறியுள்ளார்.

முன்னாள் நீதியரசர் அசோக த சில்வாவின் தலைமையிலான இந்த ஆலோசனைச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிஸிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக ஆலோசனை சமை நியமிக்கப்படாமை காரணமாக, சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது உரிமைகள் சம்பந்தமாக காரணிகளை முன்வைக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லையென அரசாங்கம் கூறுகிறது. இந்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டதோடு, சிறையிலுள்ளவர்கள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக ஹரிகுப்த ரோஹனதீர கூறியுள்ளார்.

என்றாலும், இந்த ஆலோசனை சபை அமைக்கப்பட்டதன் உள்நோக்கமானது எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக புள்ளிகளை பெற்றுக் கொள்வதுதான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது