வடக்கில் மீனவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்காக அந்தக் கட்சியின் யாழ் அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் வடக்கில் பல கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு பயணத்தை மையப்படுத்தி இந்தக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் நடந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார்.

”சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சி. எமது கட்சியில் சிறியவர் பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களது சுதந்திரக் கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு அதிகூடிய ஆசனங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும்.

அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அத்தோடு எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு அதாவது மாகாணசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் எமது கட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு முன்நோக்கி கொண்டு செல்வோம் தற்போது நாட்டில் மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் எரிவாயு, பசளை,அத்தியாவசிய பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் தலைமைத்துவத்துவம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது தெற்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.