கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் (Open Court) விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அழைப்பாணை அனுப்புவது அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹமுத்துகல தெரிவித்தார்.

மேலும், பகீரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்க வேண்டிய மிகவும் அவசரமான, அத்தியாவசிய வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்ததன் பின்னர், நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்து அழைப்பாணை விடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணைகள் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகும்.

சம்பந்தப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிபதியின் அனுமதியின்றி நீதிமன்ற அறைக்குள் நுழைய முடியாது. அனைத்து சட்டத்தரணிகளும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹமுத்துகல மேலும் தெரிவித்தார்.