கொரோனாத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும் பல ஜனாதிபதி செயலணிகள் உள்ளன. ஆனால், ஒன்றாலும் பயனில்லை. கொரோனா பரவலை தேசிய பிரச்சினையாகக் கருதி சர்வகட்சி மாநாட்டை நடத்துமாறு ஜனாதிபதியிடம் பணிவுடன் கோரிக்கை விடுக்கின்றோம்.
என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவியேற்றபோது நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இன்று அந்த மகிழ்ச்சி தவறானது என உணரப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இன்று பல ஜனாதிபதி செயலணிகள் உள்ளன. ஆனால், எதிலும் பயன்கிடைக்கவில்லை. கொரோனாப் பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துவது அவசியமாகும்.
அரசியல் மட்டத்தில் முரண்பட்டுக் கொள்ளும் தருணம் இதுவல்ல. ஆகவே, தற்போதைய நிலையை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதி செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சுகாதார அமைச்சு பலவீனமடைந்துள்ளது.
சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வு காணாமல் சிறந்த சுகாதார சேவையை எதிர்ப்பார்க்க முடியாது.
செல்வத்தை வழங்குமாறு மக்கள் கோரவில்லை. உயிர்வாழ பாதுகாப்பு சூழலை ஏற்படுத்துமாறும், மூன்று வேளை உணவு அல்ல ஒரு வேளை உணவையாவது பெற்றுக் கொள்வதற்கான சூழலையே மக்கள் கேட்கிறார்கள்.
அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவியேற்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், இன்று அது தவறு என்று எண்ணுகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சீனியின் விலை என்றும் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்புக் கூறுவது?
அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் எந்தளவுக்கு அதிகரிக்கப்படும் என்பதை குறிப்பிட முடியாது – என்றார்.
இணைந்திருங்கள்