அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.
இந்நிலையில், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் கமிஷனராக அரசு நியமித்துள்ளது. வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரிசி, நெல், சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசி, சர்க்கரை, பால் மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுகிறது. மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன்னியச் செலாவணியை பயன்படுத்த உதவும் வகையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை மந்திரி உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார். எரிபொருள் பயன்பாடு குறையவில்லை என்றால், அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணைந்திருங்கள்