“ அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனி மற்றும் அரிசி விற்பனை செய்யப்படுமானால் அத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அமுலில் உள்ள ஆயிரம் ரூபா தண்டப்பணம் 10 லட்சமாக அதிகரிக்கப்படும். அதற்கான சட்டத்திருத்தம் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசி மற்றும் சீனி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விலைக்கு அதிகமாக ஏதேனும் கடைகளில், நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் நுகர்வோர் 1977 என்ற இலக்கத்துக்கு முறையிடலாம். நுகர்வோர் அதிகார சபையால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தொகையை அதிகரிப்பதற்கான திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டுப்பாட்டு விலையைமீறி, தனிநபர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டால் ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபாவரையே தண்டப்பணம் அறிவிடப்படுகின்றது. புதிய திருத்தத்தின் பிரகாரம் அந்த தொகையை ஒரு லட்சம் முதல் 10 லட்சம்வரை அதிகரிக்கப்படும்.

நிர்ணய விலை மோசடியில் 2ஆவது தடவையும் சிக்கும் தனிநபர்களுக்கு 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம்வரையே தண்டப்பணம் அறிவிடப்படுகின்றது. அந்த தொகை 2 லட்சம் மூலம் 20 லட்சம்வரை அதிகரிக்கப்படும். நீதிமன்றம் தீர்மானித்தால் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

அத்துடன், நிர்ணய விலையை மீறும்வகையில் நிறுவனம் செயற்பட்டால் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் அறவிடப்படுகின்றது. அந்ததொகை 10 லட்சம் முதல் 100 லட்சம்வரை அதிகரிக்கப்படவுள்ளது. 2ஆவது தடவையும் மோசடியில் ஈடுபட்டால் தற்போது 20 ஆயிரம் முதல் 2 லட்சம்வரையே அறவிடப்படுகின்றது. அந்த தொகை 20 லட்சத்திலிருந்து 200 லட்சம்வரை அதிகரிக்கப்படும்.

அதேவேளை, அரசு விலை குறைக்காது, எதையும் குறைக்காது என்றனர். தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆட்சி என குற்றஞ்சாட்டுகின்றனர்.” -என்றார்.