எகிப்தின் சுயெஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற மிகப் பெரிய கண்டெயினர் கப்பல் குறுக்காக அடைத்துக் கொண்டு நிற்கின்றது.இதனால் கொரோனா பெரும் தொற்றால் ஏற்கனவே பெரிதும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கும் உலக வணிகத்தில் இன்னொரு அடி ஏற்பட்டிருக்கின்றது.

மனிதனால் உருவாக்கப் பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களில் ஒன்றான சுயெஸ் கால்வாய் மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுருக்கமான கடல் வழியாகும். இக்கால்வாயில் தான் தற்போது எவர்கிரீன் என்ற சரக்குக் கப்பல் திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக குறுக்காக சிக்கியுள்ளது. இதனால் இக்கால்வாய் ஊடாக ஒவ்வொரு நாளும் செல்லக் கூடிய சுமார் 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்கு, தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மணித்தியாலமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப் படுகின்றது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கால்வாய்க்கு மாற்றாக கிழக்கு ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு வணிகக் கப்பல்கள் பயணிக்க வேண்டுமெனில் ஆப்பிரிக்கா கண்டத்தினை சுற்றி நன்னம்பிக்கை முனையூடாக செல்ல வேண்டும். இது மிகவும் நீளமான சுற்று வழியாகும். இவ்வாறு பயணித்தால் இன்னும் ஒரு வாரம் நீண்ட பயணத் தூரமும், அதிகளவு எரிபொருள் செலவும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுயெஸ் கால்வாய் வழியாக ஒவ்வொரு நாளும் மேற்கே இடம்பெயரும் வணிகத்தின் மதிப்பு 510 கோடி டாலர் என்றும் கிழக்கே இடம்பெயரும் வணிகத்தின் மதிப்பு 450 கோடி டாலர் என்பதும் அவதானிக்கத்தக்கது. சுயெஸ் கால்வாயில் தற்போது சிக்கியுள்ள இந்த எவர்கிரீன் சரக்குக் கப்பல் உலகின் மிகப் பெரும் கொள்கலன் கப்பல்களில் ஒன்றாகும். 400 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் சுமார் 200 000 மெட்ரிக் டொன் சரக்கு உள்ளது. மிக அதிகளவு இந்திய ஊழியர்களுடன் தற்போது உலக வணிகத்துக்கே முட்டுக் கட்டையாக சுயெஸ் கால்வாயின் தெற்கு நுழைவாயிலின் சுயெஸ் நகருக்கு அருகே சிக்கியுள்ளது.

அதிதிறன் வாய்ந்த பல இழுவைப் படகுகள் வாயிலாக இந்தக் கப்பலை மீட்டெடுக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. ஆனால் கப்பல் மிகப் பிரம்மாண்டமானது என்பதால் இக்கப்பலை திசை திருப்ப வாரக் கணக்கில் எடுக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் உலகின் பங்கு சந்தைகளில் மிகப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சுயெஸ் கால்வாய் வழியாகத் தான் இந்தியாவுக்கும் மிக அதிகளவு கச்சா எண்ணெய் வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீட்பு நடவடிக்கையில் எகிப்துக்கு உதவத் தயார் என அமெரிக்க அதிபர் பைடென் அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்