நியூஸிலாந்து ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை நபர் குறித்த விவரங்களை சட்டக் காரணங்களுக்காக தற்போது வெளியிட முடியாது என்று பிரதமர் ஜஸிந்தா ஆர்டன் கூறியிருக்கிறார்.

ஆனால், நாளை ஞாயிற்றுக்கிழமை மேலதிக விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அவரது விவரங்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு நியூஸிலாந்து அரசிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.

தற்போதைக்கு “எஸ்” என்ற குறிப்பெழுத்தில் விழிக்கப்படும் இந்த நபர் குறித்த முழுமையான பெயர் விவரம் வெளியிடப்படாவிட்டாலும், இவரது கடந்த கால தீவிரவாத வெறிபிடித்த பின்னணி ஒரளவுக்கு தெரியவந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் வந்து இறங்கிய இந்த இலங்கையர், இஸ்லாமிய தீவிரவாத எண்ணங்களோடு சமூக வலைத்தளத்தில கருத்துக்களை பகிர்பவராக 2016 இல் நியூஸிலாந்து பொலீஸாரால் அடையாளம் காணப்பட்டார்.

2015 இல் பாரிஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த சமூக வலைத்தள செய்திகளின் கீழ், கொடிய பின்னூட்டங்களை எழுதுபவராக பொலீஸாருக்கு அறியவந்தபோது, இவர் தொடர்பான கண்காணிப்பினை பொலீஸார் தீவிரப்படுத்தினார்கள். நேரில் சந்தித்து இவரது நடவடிக்கைகள் தொடர்பாக எச்சரித்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நபர், நியூஸிலாந்திலிருந்து சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளுடன் இணைவதற்கு திட்டமிட்டவர்கள் தொடர்பாகவும் அதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இணையத்தில் தொடர்ந்து தேடிவந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு ஒரு வழிப்பயணமாக செல்வதற்கு டிக்கெட் பதிவுசெய்துகொண்டு விமான நிலையம் சென்றபோது, இவர் அங்கு வைத்து சந்தேகத்தில் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இவரது வீட்டில் சென்று பொலீஸார் தேடுதல் நடத்தியபோது, ஆயுதங்களோடு இவர் எடுத்துக்கொண்ட படம் உட்பட, படுக்கையின் அடியில் ஒளித்துவைத்திருந்த கத்தியையும் கைப்பற்றியிருக்கிறார்கள். அதன்பின்னர், சுமார் ஒரு வருடமாக – பிணை மறுக்கப்பட்ட – விசாரணைக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு இவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவரை தொடர்ச்சியாக கண்காணிக்கும்படி அறிவுறுத்திய நீதிமன்றம், தடுப்பிலிருந்து விடுதலை செய்தது.

இவர் விடுதலையான அடுத்த நாளே – 2018 ஓகஸ்ட் 8 ஆம் திகதி – தான் முன்னர் வைத்திருந்தது போன்ற கத்தி ஒன்றை வாங்கியிருக்கிறார். இவர் உடனடியாக பொலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். மீண்டும் அவரது இருப்பிடத்தில் சென்று பொலீஸார் தேடுதல் நடத்தியபோது, தீவிரவாதிகள் முகமூடி அணிந்துகொண்டு கழுத்தை வெட்டுகின்ற காணொலிகளை மீட்டுள்ளனர்.

இவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பொலீஸார், நியூஸிலாந்தின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால், அதனை மேல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இவருக்கு கண்காணிப்பு கருவி பொருத்தும் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மீண்டும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட இந்த நபர், தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய “தனித்த தூங்கும் ஓநாய்” என்று பொலீஸார் கருதினர். இவரது நடவடிக்கைகளை 24 மணிநேரமும் கண்காணித்துவந்தார்கள்.

சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமையன்றுகூட, இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, ரயிலில் ஏறி பல்பொருள் அங்காடிக்கு வந்தபோது, இவரை வீட்டிலிருந்து பொலீஸார் பின்தொடர்ந்து வந்தார்கள். கிட்டத்தட்ட பிற்பகல் 2.20 மணிக்குள் அங்காடிக்குள் சென்றவர், வழக்கமாக பொருட்களை வாங்கும் 10 நிமிடத்தை அதிக நேரத்தை அங்கு செலவிட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் இவரது நடவடிக்கைகள், ஏதோ செய்யப்போகிறார் என்ற சந்தேகத்தை பொலீஸாருக்கு ஒரளவு ஏற்படுத்தியிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானால்தான், பல்பொருள் அங்காடிக்குள் சென்று கத்தியை எடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை குத்தத்தொடங்கியபோது, பொலீஸாரால் உடனடியாக அவரை சுட்டுக்கொல்லமுடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் தீவிரவாத எண்ணங்களோடு திரிபவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் மீது தகுந்த சட்டத்தின கீழ் வழக்கு பதிவு செய்கின்ற அதிகாரம், பொலீஸாருக்கு இன்னமும் முழுமையாக வழங்கப்படாததும், நீதிமன்றமும்கூட இந்த விடயத்தில் அதிகம் எதுவும் செய்யமுடியாத நிலையிலிருப்பதும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

நியூஸிலாந்து நாடாளுமன்றம் இது தொடர்பிலாக சட்டத்திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்றும் நாடாளுமன்ற இயற்றுகின்ற சட்டத்துக்கு, வடிவம் கொடுப்பதாகவே நீதிமன்றமும் பொலீஸாரும் செயற்படமுடியுமே தவிர, இப்போதைக்கு களத்தில் இப்படியான நிலமைகளை சமாளிப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் வலுவிழந்தவர்களாகவே உள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.