தர்கா நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிடவேண்டாம் என ஞானசார தேரரிடம் தலை சாய்த்து கேட்டுக்கொள்கின்றேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் பீல்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தில் தேவையான அளவு பணம் இருப்பதாக அரசாங்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இன்று மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள காலையிலேயே நீண்டவரிசையில் காத்துக்கொண்டிருக்கவேண்டி இருக்கின்றது.
அத்துடன் நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது. அதற்கான அடையாளங்களை காண்கின்றோம். ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம் பாதிகப்பட்டவர்களுக்கு இதுவரை நீதியை பெற்றுக்கொடுக்க தவறி இருக்கின்றது.
அதனால் இன்று அரசாங்கத்திடமே மக்கள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மீண்டுமொரு தாக்குதல் தொடர்பில் கதைக்கின்றனர்.
ஞானசார தேரர் ஊடகத்துக்கு முன்னால் வந்து பயங்கரவாத தாக்குதல் ஒன்று தொடர்பில் கதைப்பதை கண்டேன். நான் ஒரு சிறந்த பெளத்தன். அதனால் அவரிடம் கேட்டுக்கொள்வது, தர்கா நகரில் பிரச்சினை ஏற்படுத்தியதுபோன்று மீண்டும் இந்த நாட்டில் அவ்வாறான விடயங்களை கொண்டுவந்து, மக்கள் மத்தியில் அச்சம், பயத்தை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிட வேண்டாம் என தலை வணங்கி கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோன்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பைத்தியகாரர் போன்று புலம்புகிறார். பைத்தியகார பேச்சுக்களை பேசிக்கொண்டு, அவரும் ஞானசார தேரர் பயணிக்கும் பாதையிலேயே செல்கின்றார். இது குரங்குக்கு சவரக்கத்தியை வழங்கியது போல், அவர் நாளா பக்கத்துக்கும் அடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் அரசாங்கம் தனது வங்குராேத்து நிலைமையை மறைப்பதற்காக மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை, பீதியை ஏற்படுத்தக்கூடாது என்றார்.
இணைந்திருங்கள்