புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்க விட்டு விட்டார்கள். இது இன்று தொழிற்படும் அரசாங்கம் இல்லாத, தலைவர் இல்லாத, வழிகாட்டி இல்லாத நாடாக போய் விட்டது. திக்கு தெரியாமல், திசை தெரியாமல் இந்நாடு இன்று அல்லாடுகிறது.
மக்கள் விலைவாசியால் விழி பிதுங்குகிறார்கள். இதற்கு இந்த அரசின் ஒரே பதில் உலகம் முழுக்க உலக கொரோனா பரவி உள்ள எமது நாட்டினதும் பொருளாதாரத்தை அழித்து விட்டது என்பதாக மாத்திரமே இருக்கிறது. ஆம், கொரோனா உலகம் முழுக்க இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இருக்கிறது.
ஆனால், அங்கெல்லாம் பொருளாதாரம் இப்படி அழியவில்லை. விலைவாசி இப்படி நூறு மடங்கு உயரவில்லை. மக்களின் வருமானம் உடைந்து விழவில்லை.
தெற்காசியாவின் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் எப்படி எங்களுக்கு கடன் தரும் நிலையில் தங்கள் பொருளாதாரத்தை தக்க வைத்துள்ளார்கள் என்று கேட்க விரும்புகிறேன்? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ மேலும் கூறியுள்ளதாவது,
இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இல்லாத வரப்பிரசாதம் இந்நாட்டுக்கு இருக்கிறது. அதுதான் நாம் ஒரு தீவு. வெளியில் இருந்து கொரோனா வந்து எம்மை அழிக்க முடியாத நாடாக இது இருந்தது. நீங்கள்தான் கொரோனாவை அழைத்து வந்தீர்கள். நாட்டை திறந்து வைத்தீர்கள். இன்று இறந்து போயுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் சாவுக்கே காரணம் நீங்கள்தான்.
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு, கொரோனாவை காரணம் காட்ட உங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. உங்களுக்கு நாட்டை ஆளும் திறன் இல்லை. ஆகவே நாட்டை ஆளத்தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுங்கள்.
இன்று இந்நாட்டுக்கு கொண்டு வரபட்ட உரத்தில் பற்றீரியா இருந்தது என்றும், நமது மண்ணுக்கு பொருத்தமற்றது என்றும் நமது நாட்டின் தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை சமர்பித்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை தவறு என சீன தூதரகம் கூறுகிறது.
தங்களது உரம் தரமானது என சீனா கூறுகிறது. தங்கள் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையையை அவர்கள் சமர்பிக்கிறார்கள். இது என்ன? இந்த விவகாரம் தொடர்பில் நமது நாட்டு தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் பதில் கூற வேண்டும்.
இந்நாட்டில் இன்று சீனாவுக்கு துறைமுக நகரை ஒப்படைத்தது போக, அதை சுற்றியுள்ள சுமார் 13 ஏக்கர் நிலமும் இன்று சீனாவுக்கே வழங்கப்பட உள்ளதாக நாம் அறிகிறோம். அங்கேதான் இலங்கையின் அதிகாரபூர்வ ஜனாதிபதி மாளிகையும் உள்ளது.
அதுதான் முன்பு பிரித்தானிய காலத்தில் வெள்ளையர்களின் ஆளுநர் மாளிகையாக இருந்தது.
ஆகவே அந்த மாளிகையையும் சீனாவுக்கு கொடுத்து விட்டு, அங்கே ஒரு சீன ஆளுநரையும் கொண்டு வந்து குடியமர்த்துங்கள். அது சீனாவின் ஆளுநர் மாளிகையாகட்டும். ஒளித்து, மறைத்து செய்யாமல், அதை பகிரங்கமாக செய்து, இந்நாட்டை சீனாவின் காலனியாக அறிவித்து விடுங்கள்.
இணைந்திருங்கள்