சிறிலங்காவில் அடுத்த அரசியல் புரட்சியை ஏற்படுத்த ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி ஒன்றை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வந்து, விரிவான அரசியல் அணியை உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிய வருகிறது


இந்த கூட்டணியை உருவாக்குவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகள் ஏற்கனவே இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த நடவடிக்கைகளை எடுத்திருந்த 49 சிவில் அமைப்புகளில் 40 அமைப்புகள் இந்த திட்டத்திற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மாத்திரமல்லாது பொதுசன ஐக்கிய முன்னணிக்கு மீண்டும் உயிரூட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணியை இணைத்து விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற யோசனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுசன ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கவில்லை. இதனால், அந்த கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுசன ஐக்கிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளான இலங்கை கம்யூனிசுட் கட்சி மற்றும் லங்கா சமசமாசக் கட்சி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் இல்லை என்பதால், அந்த கட்சிகளையும் இந்த கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை புதிய கொள்ளை திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்லும் விதம் சம்பந்தமாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்ற முன்னணியின் நிறைவேற்றுக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது