கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 12 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது.

கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

இடுக்கி மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆகவும், கோட்டயம் மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஞாயிறு காலையில் தெரிவித்தனர்.

கூட்டிக்கல் மலை கிராமத்தில் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சேதம் அடைந்த வீடுகளில் இருந்தவர்களை மீட்க இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரபிக் கடலில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்துக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மழை வெள்ளம் தீவிரம் அடைந்துள்ளது. இங்கு தீவிரம் அடைந்துள்ள மழைப்பொழிவு அசாதாரணமாக கருதப்படுகிறது. காரணம், இது தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவதற்கும் வடமேற்கு பருவமழை தொடங்குவதற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் இரவில் பாதிக்கப்பட்டன. அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பயங்கர மழை பெய்து வருகிறது. முன்னதாக ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிகால் என்ற இடத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முடிவதற்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கும் இடையில் உள்ள காலம் இது. இதற்கிடையே, “கூட்டிக்காலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவள்ளி என்ற இடத்தில் ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மீட்புப் பணிகளைத் தொடங்கியது,” என்று இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஞாயிறு காலை முதல் மழை கொஞ்சம் விட்டிருப்பதால் மீட்புப் பணிகள் கொஞ்சம் வேகமெடுத்தன. தமிழ்நாட்டின் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு திருவனந்தபுரம் வருவதற்கும் இது உதவியாக இருந்தது.

சில இடங்களில் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க கடற்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.

இடுக்கி மாவட்டத்தில்...

இடுக்கி மாவட்டத்தில்…

கேரளா முழுவதும் இன்று இடி மழையும், வேகமான காற்றும் வீசும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. எனவே, மழை நிற்காவிட்டால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம் தற்போது பலவீனமடைந்து வருகிறது. ஆனாலும் மாலை வரை மழை தொடரும் என்றுதான் வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன” என்று முதல்வர் பினராயி விஜயன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் லட்சத் தீவுகளை உள்ளடக்கிய மேற்குக் கடற்கரையோரம் அக்டோபர் 18ம் தேதி இரவு 11.30 வரையில் 2.5 முதல் 3.3 மீட்டர் வரையிலான உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்று தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (INCOIS) கூறியுள்ளது. மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அது கூறியுள்ளது.