“இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்மையில், ஐ.நா. பொதுச்செயலரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் பிரச்சினைகள் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் இலங்கை அரசு தடை செய்த பட்டியலில் உள்ள அமைப்புக்களுடன் பேச்சு நடத்தப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்று பீரிஸிடம் ஊடகங்கள் வினவியபோது,

“உலகத் தமிழர் பேரவை, பிரிட்டிஷ் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாகும்.

இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட நபர்களுடன் அரசு பேச்சு நடத்தாது. அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் நிதியுதவி வழங்கியவர்கள். இப்போதும் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயற்சிப்பவர்கள். அவர்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது.

இலங்கையின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தில் பங்காளியாக செயற்பட விரும்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன. அவர்களுடன் நாம் பேச்சு நடத்துவோம்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் அறிவிப்பை வரவேற்றிருந்த தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், சர்வதேச மத்தியஸ்துடன் பேச்சு நடத்தத் தயார் என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.