பொதுமக்களின் பணத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் கட்டப்பட்ட மாலம்பே, ‘இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SLIIT) மூன்று பேருக்கு சொந்தமாகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் அம்பலப்படுத்தியுள்ளார்.

09வது பாராளுமன்றத்திதன் முதலாவது மற்றும் இரண்டாவது கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது (SLIIT) நிறுவனத்தையும், அது அமைந்துள்ள 25 ஏக்கர் காணியையும் அதனை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரும் கையகப்படுத்திக் கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இது தொடர்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்

‘மாலம்பேயில் அமைந்துள்ள ஸ்லிட் நிறுவனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். தாபனப்படுத்தப்பட்டு சட்டமொன்றை தயாரிக்கும் வரை சிறிய நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. தற்போது அரசாங்கத்திற்கு உரிமையில்லாத, பாராளுமன்றத்திற்கு உரிமையில்லாத நிலைமைக்கு இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேரும் இதன் உரிமையாளர்களாக ஆகியுள்ளனர். இது ஒரு பாரதூரமான குற்றமாகும்.