பாகிஸ்தான் அணி இன்று துபாயிலிருந்து பங்களாதேஷ் பயணமானது.

பங்களாதேஷ் செல்லும் அணி, மூன்று இருபதுக்கு20 போட்டிகளை தொடர்ந்து சிற்றகொங் மற்றும் டாக்கா ஆகிய நகரங்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ளவுள்ளன.

இதேவேளை, உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான மொஹமட் ரிஸ்வான் அணிக்காக 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த போதிலும், அவுஸ்திரேலியா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி அவருக்கு திடீர் என ஏற்பட்ட மார்பு வலி காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 36 மணி நேரம் சிகிச்சை பெற்றதாக அணியின் மருத்துவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர், பாகிஸ்தான் அணிக்காக 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

மொஹமட் ரிஸ்வான் மார்பு வலி காரணமாகச் சிகிச்சை பெற்ற விடயம், போட்டி நிறைவடைந்த பின்னரே தெரியவந்திருந்தது.