2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இது சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டமாகும்.

23 நாள் தொடர் விவாதத்தையடுத்து எதிர்வரும் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் தொடர்பான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் வரவு செலவுத்திட்டம் மீதான உரை சற்றுமுன் ஆரம்பமானது.

கேட்டல் குறைப்பாடுள்ளவர்களுக்காக, வரவு செலவுத்திட்ட விவாதம் நேரடி ஒளிபரப்புடன் விசேட சைகை மொழி சாளரமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.

அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் முதலாவதாக முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டமாக இது கருதப்படுவதுடன் இந்த அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகவும் இது கருப்படுகின்றது.

இன்றை வரவு செலவுத் திட்டம் மீதான உரையின் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்புக்காக வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் மற்றும் வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23ஆம்ஆரம்பமாவதுடன் அன்றிலிருந்து எதிர்வரும் டிசம்பா் மாதம் 10ஆம் திகதிவரையான 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் முன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறும்.2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், பாதுகாப்பு அமைச்சின் செலவுக்காக 373 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 127.6 பில்லியன் ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 153.5 பில்லியன் ரூபாவும் விவசாய அமைச்சுக்கு 243.9 பில்லியன் ரூபாவும் எதிர்வரும் வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 2505.3 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வருடம் 2538 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்க செலவீனத்தில் 33 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னா் நாளை முதல் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முழு காலப்பகுதியிலும் சகல சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக அமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற கெலரி பொதுமக்களுக்கு திறக்கப்படாது மற்றும் வரவு செலவுத் திட்ட குழு அமர்வில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளாா்கள்.

அழைக்கப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திர தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான சிறப்பு விருந்தினர் கெலரி திறக்கப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்ட உரை முடிந்ததும், நிதியமைச்சர் பாரம்பரிய தேநீர் விருந்து நடத்தவுள்ளதுடன் ஆனால் அது எம்.பிக்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.