இம்முறை வரவு – செலவு திட்டத்தில் மக்கள் பல எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த போதிலும் சகலரும் கவலையடையக்கூடிய விதத்திலேயே இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வரவு – செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட வேளையில் பொதுமக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர், ஆனால் சகல மக்களும் கவலையடையும் பல விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளதை நாம் அவதானித்தோம்.

சகல சலுகைகளையும் கொடுக்க முடியுமான நிலையில் நாம் இல்லை, ஆனால் ஒரு வேலைத்திட்டம், முன்னகர்வு மற்றும் அடிப்படை ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜ்பக்ஷவை ஜனாதிபதியாக்கிய வேளையில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அதில் பிரதானமான விடயம் என்னவென்றால் அரசாங்கம் மாறினாலும், அமைச்சர்கள் மாறினாலும் மாறாத கொள்கைத்திட்டமொன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கடந்த காலத்தை விட இந்த வரவு – செலவு திட்டத்தில் வரைபொன்று உள்ளது, ஆனால் அது உறுதிப்பட நீண்ட காலம் எடுக்கும். அதற்கான ஆரம்பத்தை நாம் இப்போதே முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் எமது எதிர்கால சமூகத்திற்கு முறையான வேலைத்திட்டம் கிடைக்கும்.

எனவே வரவு செலவு திட்டத்தில் மக்களை சுமைக்குள் தள்ளாத அதேபோல் நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் கையாளப்பட வேண்டும்.

தேசிய ரீதியில் எழுந்து நிற்கக்கூடிய பொறிமுறையை அமைக்க வேண்டும். அதற்கான முயற்சியாக இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது. புதிய உலகத்துடன் இணையக்கூடிய தேசிய உற்பத்தியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

நாட்டை வீழ்த்தும் நோக்கம் இருக்கும் என்றால், இப்போது அதற்கான சூழ்ச்சியை செய்தால் எதிர்காலத்தில் இலங்கையினால் ஒருபோதும் வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க முடியாது என்றார்.