இனிமேல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், மின்சார சபை டொலர்களை வழங்க வேண்டும் என மின்சக்திமற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்று (திங்கட்கிழமை) பின்னர் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டபோதும் அவற்றை மீளமைக்க இரண்டு தடவைகளில் 3000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் எரிபொருளுக்காக டொலர்கள் செலுத்தப்பட்டாலும் எரிபொருளை இறக்குமதி செய்ய சுமார் ஒருவாரகாலம் எடுக்கும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள இருப்புக்களை மின்சார உற்பத்திக்கு வழங்கினால் போக்குவரத்துத் தேவைக்காக இருக்கும் எரிபொருள் கையிருப்பு அடுத்த வாரத்திற்குள் தீர்ந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபைக்கு அவ்வப்போது வழங்கப்பட்டுவரும் எரிபொருளுக்காக 920 மில்லியன் ரூபாயை எரிசக்தி அமைச்சுக்கு செலுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.