அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசிலிருந்து வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது செயற்படுத்துகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு மேசையில் அமர்ந்து அப்பம் சாப்பிட்டு அடுத்த நாள் காலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதை எவரும் மறக்கவில்லை.

2014ஆம் ஆண்டு அப்பம் சாப்பிட்ட கதையில் இரண்டாம் பாகத்தை மீண்டும் அரங்கேற்ற இடமளிக்க கூடாது.

சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அவர்களை வெளியேற்றுவது அரசாங்கத்திற்கு பாதுகாப்பானதாக அமையும் என்பதை அரசாங்கத்தின் உயர் தரப்பினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.

2019ஆம் ஆண்டு சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றிணைந்த போதிலும் அவர்களின் செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்படுகிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர கட்சியை ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது செயற்படுத்துகின்றார்.

அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்க முடியாவிடின் தாராளமாக வெளியேறலாம்.” – என்றார்.