ராஜபக்ச குடும்பத்தில் மனைவிகளுக்கிடையே நிலவி வந்த பகை தீர்ந்து சுமுகநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்சவுக்கும் பசிலின் மனைவி புஸ்பாவிற்கும் இடையே முரண்பாடான நிலை இருந்து வந்ததாகவும் இதனால் இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்து பேசிக் கொள்வதில்லை எனவும் அரசியல் தளங்களில் பேசப்பட்டது.

நீண்ட காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஷவின் மனைவியான புஸ்பா ராஜபக்ஷ இலங்கை வந்துள்ளார். இவர் அண்மையில் மாளிகாவத்த கோல்ட்டன் சிறுவர் பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கோல்டன் நிகழ்வில் புஸ்பா ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளதால் பகை தீர்ந்துவிட்டதாக அறியமுடிகிறது. இதன்மூலம் அரசியலிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புஸ்பா ராஜபக்ஷவை மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் ஷிராந்தி – புஸ்பா இணைவானது அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என கருதப்படுகிறது.

புஸ்பா ராஜபக்ஷ என்பவர் சிறந்த சட்டத்தரணி என்பதுடன் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கிறீன் கார்ட் கிடைத்து அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் 1994ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த போது ஈரிஎப் ETF திணைக்களத்தின் அனைத்து பணிகளையும் புஸ்பா ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார்.

2005 – 2014 காலப் பகுதியில் புஸ்பா நிதியம் உருவாக்கி அதன் மூலம் கம்பஹா மற்றும் மாத்தறை பகுதிகளில் சமூக சேவைகள் பலவற்றை அவர் செய்துள்ளார். 2014ம் ஆண்டே புஸ்பா ராஜபக்ஷ மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் புஸ்பா ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் இணைவு மாற்றத்திற்கான அறிகுறியாகவே அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது.