ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய மோடி, இதுபற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் தேர்தல் கமிஷன் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள், 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று இந்த நாளையொட்டி பிரதமர் மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாட ஏற்பாடானது. பின்னர் இது நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களும் கலந்துகொள்ளத்தக்க விதத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலின்போது, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்தி அதன் கண்ணியத்தை தேர்தல் கமிஷன் அதிகரித்து வருகிறது.

தேர்தல் கமிஷனுக்கு, அதிகாரிகளை இட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை.

1951-52-ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் வாக்குப்பதிவு சதவீதம் இருந்தது. தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்கள் வாக்களிப்பது அதிகரித்து இருப்பது நல்ல விஷயம். ஆனால் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவான வாக்குப்பதிவு பற்றி சிந்திக்க வேண்டும்.

கல்வி அறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகிற நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டு போடத்தான் வருவதில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவை பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பிற கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவு மிகவும் புனிதமான நன்கொடை ஆகும். வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்பது பற்றிய விவாதத்திற்கு அழுத்தம் தர வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளியே வரட்டும்.

அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டும் தேர்தலில் போட்டியிடமாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று  கூறினார்.