தேசத்தை ஒருங்கிணைத்து அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய அரசியலமைப்பு ஒன்று நாட்டிற்குத் தேவை என என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியினால் நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியின்படி மக்களாலும் நாடாளுமன்றத்தாலும், உருவாக்கப்படும் அரசியலமைப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

“ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நாடாக நாம் உலகத்தின் மதிப்பைப் பெற வேண்டும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். 20வது திருத்தம் ஜனநாயகத்திற்கு பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்,” என்றார்.

‘நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ மற்றும் ‘தேசிய மத நல்லிணக்கத்திற்கான தேசிய ஒருமைப்பாடு’ என்பன இணைந்து நடாத்திய ‘சிறந்த நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு’ தொடர்பான குருநாகல் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த மகா சங்கத்தினர், கத்தோலிக்க, கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து சமயத் தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பிரமுகர்கள் உட்படப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் தனது உரையின் தொடக்கத்தில், இந்த மாநாடு அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவோ அல்லது மக்களைத் தூண்டுவதற்காகவோ நடத்தப்படவில்லை என்று கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

“இந்த நாட்டில் தேசிய மத மற்றும் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவதும், இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும் பேரிடரில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதுமே எங்களின் ஒரே நோக்கம்.

நாட்டில் ஒற்றுமை இல்லாமல், தேசிய கொள்கை ஒருமித்த கருத்து இல்லாமல், எந்த வகையிலும் மீண்டு வர முடியாது. பேரழிவு தரும் பொருளாதார வீழ்ச்சிக்கு கூடுதலாக, ஓமிக்ரான் வைரஸின் பரவல் நமது வாழ்க்கைக்கு மற்றொரு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது.

நாட்டில் இவ்வாறானதொரு பேரழிவு நிலை ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டையும் மக்களையும் உருவாக்குபவர்கள் அதன் விளைவுகளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதில் நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம்.

வடமேல் மாகாணத்தில் கணிசமான முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் உள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவினரும் மிகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தாலும், அரசியல் செல்வாக்கின் கீழ் இந்த சமூகத்தினரிடையே வெறுப்பையும், கோபத்தையும், ஒற்றுமையின்மையையும் பரப்பும் முயற்சியையும் பார்த்தோம். குறுகிய மனப்பான்மை கொண்ட செயற்பாடுகளால் நாடு பாரிய சேதத்தை சந்தித்து வருகின்றது.

இந்த பஸ்கா நிகழ்வு சிங்கள கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமூகத்தினரிடையேயும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. நீதித்துறையும் கூட, பாரபட்சமின்றி நடந்துகொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான விடயங்கள் சர்வதேச ரீதியில் பகிரங்கப்படுத்தப்பட்டால் அது எமது நாட்டிற்கும் மக்களின் நற்பெயருக்கும் மிகவும் பாதகமாக அமையும்.

அந்த முன்னுதாரண ஐக்கியத்தை வடமேல் மாகாணத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இன்று நாம் வடமேல் மாகாணத்தை தெரிவு செய்துள்ளோம். வடமேல் மாகாணத்தில் அமைதியான, புத்திசாலித்தனமான மக்கள் உள்ளனர்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய மற்றும் மத ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமித்த கருத்து அவசியம். இங்கு கட்சி நிற வேறுபாடுகள் இருக்க முடியாது. இதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வெளிநாட்டு டொலர் நெருக்கடி, டீசல் தட்டுப்பாடு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, பால் மா தட்டுப்பாடு போன்ற எரியும் பிரச்சனைகள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டியவை. இது சுகாதாரப் பாதுகாப்பு, நீர் வழங்கல், உற்பத்தி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த இக்கட்டான சூழலை நிவர்த்தி செய்வதற்கான உறுதியான முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் காணவில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் எந்தவிதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. அமைச்சர்களுக்கிடையே விவாதங்களை நடத்துவதற்கு பதிலாக, அரசாங்கமும் நிதியமைச்சரும் முன்னின்று நடத்த வேண்டும். ஒருமுறை பிரச்சனை வந்தால் அதை எளிதில் தீர்த்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.

இன, மத அல்லது வேறு எந்த வகையிலும் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என எமது அழைப்பின் பேரில் இன்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

சமத்துவத்துடன் ஒன்றிணைவோம்!
அதற்காக ஒன்றுபடுவோம்!

எதிர்கால தலைமுறைக்கு நவீன மற்றும் வளமான நாட்டைக் கொடுப்போம்! ”.