இலங்கையின் தற்போதைய டொலர் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புறக்கோட்டையில் கறுப்புச் சந்தை முதலாளிகளின் கதையைக் கூறி முழுமையாக நிலைமையை சீர்குலைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கறுப்புச் சந்தை டொலர் கதையினால் தற்போது மத்திய வங்கி ஆளுநருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடந்த காலங்களில் இருந்துவந்த மோதல், கறுப்புச் சந்தை அறிவிப்பின் பின்னர் மேலும் உக்கிரமடைந்துள்ளது.

போர் காலத்தில் கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுங்கள் பெற்றதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு மத்திய வங்கியின் டொலர் சட்டதிட்டங்களுக்கு முரணானது என்பதால், நிதி நெருக்கடி விவகாரம் மேலும் மோசமடைந்துள்ளது.

”மத்திய வங்கி, அரசாங்கம் என்ற வகையில் இதில் பாதிப்பு இருக்கலாம். ஆனால் நாடு என்ற வகையில் அப்படி அல்ல. எனக்கு அதிகமாக டொலர் தேவைப்படுகிறது. எந்த வகையிலாவது வெளிநாடு சென்று, உண்டியல் முறைியல் சரி, எந்த வழியிலாவது நாட்டிற்கு டொலர்களைக் கொண்டுவர வேண்டும்.” என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த ஞாயிறு வெளிவந்த தேசிய சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

டொலர் அனுப்பிய இருவர் குறித்து விசாரணை!

நிதியமைச்சர் இப்படி கூறினாலும், மத்திய வங்கியின் அறிவுறுத்தலின்படி, உண்டியல் முறையில் டொலர்களை அனுப்பும் நபர்களை குறிவைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 26 கோடி ரூபா பணத்தை, டொலர்களாக வெளிநாட்டிற்கு அனுப்பிய இருவர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் சீ.ராகல முன்னிலையில் நேற்று முன்தினம் (31) அறிக்கையிட்டிருந்தனர்.

BlackMarket பணத்தில் போரை முன்னெடுத்தோம் : பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச BlackMarket பணம் குறித்து சிங்கள நாளிதழுக்கு வழங்கிய செவ்வி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இந்த செவ்வியில் சிங்கள தேசியவாதக் கருத்துக்களைத் தெரிவித்து சிங்கள இனவாதிகளை வெல்லும் வகையில் கூறியுள்ள கருத்துக்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது. அத்துடன், போரை முன்னெடுப்பதற்கு எவ்வாறு பணம் கையாளப்பட்டது என்ற தகவல்களும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பசிலை காப்பாற்ற களமிறங்கும் ஜீ.எல்!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் அண்மித்து வரும் நிலையில், கறுப்புச் சந்தையில் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கருத்து, இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கும் தலையிடியாக மாறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சுக்கு சர்வதேச நாடுகளிடமிருந்து வரும் விமர்சனங்களை சமாளிப்பதற்காக. நிதியமைச்சரின் இந்தக் கூற்று பொய்யானது என்று அறிவிக்கும் நிலை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு ஏற்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சருடன் கலந்துரையாடியதன் மூலம் இந்தத் தகவல் பொய்யானது எனத் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.