எஸ்.பி.ராஜேந்திரன்
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அறிவித்து, பெப்ரவரி 24 அன்று நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக இரண்டு விதமான செய்திகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஒன்று, அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளது பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்கள் உருவாக்கி அளிக்கும் செய்திகள் மற்றும் காணொலிகள். மற்றொன்று, அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது, ரஷ்யா என்ன செய்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட விவரங்களை உண்மையின் கோணத்திலிருந்து அளிக்கும் மாற்று ஊடகங்களின் செய்திகள். இவை இரண்டில் முதல் வகை உலகம் முழுவதும் மிக வேகமாகச் சென்றடைகிறது. தமிழகம் உட்பட உள்ளூர்ச் செய்தி ஏடுகளில், சேனல்களில், ஒட்டுமொத்த உக்ரைனையும் ரஷ்யா குண்டு போட்டு தகர்த்து அழித்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையா என்ற கேள்வியும் எழுகிறது. மறுபுறம், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய – துரதிர்ஷ்டவசமான இந்த ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் தமிழகம் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், அவர்களது குடும்பங்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் குறித்த செய்திகளை, தமிழகம் மற்றும் இந்திய ஊடகங்கள், குண்டு மழை பொழியப்படும் காணொலிக் காட்சிகளோடு இணைத்து ஒளிபரப்பும் போது, இங்குள்ள பெற்றோர்களின், பொதுமக்களின் மனங்களில் அச்சம் எழுகிறது. அதேவேளை, அங்கு – உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் எந்தவொரு பகுதியிலும் ரஷ்ய ராணுவம் குண்டு வீசவில்லை என்பதை அங்குள்ள மாணவர்களே காணொலி பேட்டிகளில் கூறுகின்றனர். அந்தத் தகவல் மிகவும் முக்கியமானது. அதுபோன்ற பல முக்கியத் தகவல்கள்… தமிழக மற்றும் இந்திய கார்ப்பரேட் ஊடகங்களில் இடம்பெறாத தகவல்கள், ரஷ்யாவின் இடார்-டாஸ், பிராவ்தா, ஆர்.டி. நியூஸ் மற்றும் சர்வதேச அளவில் மாற்று ஊடகங்களாக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் டபிள்யு எஸ் டபிள்யு எஸ், இன்ஃபர்மேசன் கிளியரிங் ஹவுஸ் உள்ளிட்ட பல செய்தித்தளங்களிலிருந்து இங்கு அளிக்கப்படுகிறது.
நிதானத்துடன் செயல்படும்…
1. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை துவக்குவதற்கு முன்பு ஜனாதிபதி புட்டின் ஆற்றிய உரையின் போது, உக்ரைனை நவீன நாஜிக்களிடமிருந்து (நியோ – நாஜி) விடுவிப்போம் என்று கூறியிருந்தார். இதுபற்றி கிரெம்ளின் மாளிகை (ரஷ்ய ஜனாதிபதி மாளிகை) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், ‘உக்ரைனில் பிற நாடுகள் (நேட்டோ நாடுகள்) நேரடியாக தலையீடு செய்து கைப்பற்றும் நிலைக்கு சென்று விட்டன. ஏற்கனவே அங்கு நவீன பாசிச சக்திகளின் ஆட்சி நடக்கிறது. நேட்டோ படைகளும் மேற்கண்ட நவீன நாஜிகளும் சேர்ந்து கொண்டால், இந்த பிராந்தியத்தின் நிலைமையே மோசமாகிவிடும் என்பதைத்தான் ஜனாதிபதி புடின் குறிப்பிட்டார்’ எனக் கூறினார். அப்படியானால், உக்ரைனை கைப்பற்றி ஆட்சியாளர்களை அகற்றுவீர்களா என்று செய்தியாளர்கள் பெஸ்காவிடம் கேட்டனர். “அதற்கு அப்படி அர்த்தமல்ல, ரஷ்யா மிகுந்த நிதானத்துடனே செயல்படும்” என்று பெஸ்காவ் பதிலளித்தார்.
2. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை என்பதன் பொருள், அங்குள்ள டான்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டோனட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய – தனி நாடுகளாக அறிவித்துக் கொண்ட ரஷ்ய மக்களின் பிரதேசங்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதுதான். அப்படியானால் உக்ரைன் ராணுவத்தின் அனைத்து முகாம்களையும் முடக்குவது என்று ரஷ்ய அரசு முடிவு செய்து களத்தில் இறங்கியது. ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள உக்ரைனின் ராணுவ முகாம்கள்தான் குறிவைக்கப்பட்டன. அதேவேளையில், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள லுகான்ஸ்க் பிரதேசத்திலிருந்து ரஷ்ய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
உக்ரைன் தூதரகத்துக்கு பாதுகாப்பு
3. உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரஷ்ய தூதரகத்தை உக்ரைன் அரசு மூட உத்தரவிட்டது. அங்கிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள உக்ரைன் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா கூறவில்லை. எனினும், அந்த தூதரகத்தை மூடுவதாகவும் உறவை துண்டித்துக் கொள்வதாகவும் உக்ரைன் ஜனாதி பதி ஜெலன்ஸ்கி அறிவித்தார். உறவு துண்டிக்கப்பட்ட போதிலும், மாஸ்கோவிலுள்ள உக்ரைன் தூதரகம், அதிகாரிகள், அவர்களுக்கான குடியிருப்புகள் அனைத்தும் முழு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது.
4. நேட்டோ ராணுவத்தையும் தடுக்க வேண்டும், அமெரிக்காவின் சூழ்ச்சியையும் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய உலக அளவிலான யுத்தத்திற்கு வித்திடாமல் தவிர்க்கும் பொருட்டே, கடந்த எட்டு ஆண்டு காலமாக ரஷ்யா தவிர்த்து வந்த டான்பாஸ் பிரதேச ரஷ்யர்களின் தனிநாடு பிரகடனத்தை அங்கீகரித்து, அவர்களை பாதுகாப்பது என்ற பெயரில், உக்ரைனின் வலதுசாரி பாசிச அரசுக்கு ஒரு பாடம் கற்பித்திருக்கிறது என்றும், உண்மையில் புட்டினை இந்த சமயோசித செயலுக்காகவும் ராஜ தந்திரத்திற்காகவும் பாராட்ட வேண்டும் என்று மேற்கத்திய சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதே கருத்தை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிரொலித்துள்ளார். இதற்காக டொனால்டு டிரம்ப்பை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கண்டித்துள்ளார்.
உக்ரைனின் 57ஆவது ராணுவப் பிரிவு
5. வியாழனன்று ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியவுடனே, ரஷ்ய ராணுவ முகாம்களில் இருந்த உக்ரைன் படையினர் கணிசமான அளவில் பின்வாங்கி வெளியேறினர். சில முகாம்களில் ஆயுதங்களை கீழே போடுவதாக அறிவித்தனர். உக்ரைன் ராணுவத்தின் 57 ஆவது ராணுவப் பிரிவு, உக்ரைன் உடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்து, லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் ராணுவப் படையாக தன்னை அறிவித்துக் கொண்டது.
6. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா மீது மிக மிக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அறிவித்தது. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் ஏராளமான தடைகளை அறிவித்தது. இந்தத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் வரலாறு காணாத தடை இவை என்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை குழு தலைவர் ஜோசப் போரேல் கூறினார். அதேவேளையில், மாஸ்கோவில் பேட்டியளித்த கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ், ரஷ்யா போன்ற ஒரு நாட்டை பொருளாதாரத் தடைகளால் மூடிவிட முடியாது என்பதை ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். ரஷ்யா மீது ஏற்கனவே நீங்கள் ஏராளமான தடைகளை விதித்து விட்டீர்கள், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு விட்டோம். பொருளாதாரத் தடைகள் என்ற இரும்புத்திரைகளால் ரஷ்யாவை உங்களால் தனிமைப்படுத்திவிட முடியாது என்றும் கூறினார்.
புட்டினுக்கு குறி வைப்பு
7. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எங்கும் செல்லவிடாதவாறு அவருக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஆதரவாளரான நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் கொந்தளித்தார். புட்டின் குறிவைக்கப்பட வேண்டும், அவரது அரசு தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானும் இதே தொனியில் கூறினார். உக்ரைன் மீதான நடவடிக்கைக்கு ஏற்ப ரஷ்யாவை கடுமையாகப் பாதிக்கும் விதத்தில் தடைகளை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதே போல, அமெரிக்கா ஆதரவு ஐரோப்பிய தலைவர்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
எரிவாயு சப்ளை பாதிக்கப்படாது
8. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிவாயு சப்ளை என்பது ரஷ்யாவையே பெருமளவு நம்பியுள்ளது. ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேசிய போதும், உக்ரைன் விவகாரத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக ரஷ்யா கூறியது. இது தொடர்பாக, அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ்வுடன் ரஷ்ய அரசு பேசியது. இரு நாடுகளும் துருக்கி வழியாக ரஷ்ய எரிவாயுவை கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக, ஜனாதிபதி இல்ஹாம் அறிவித்தார்.
பெலாரஸை நேட்டோ தளமாக மாற்ற முயற்சி
9. ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் நேட்டோ படைகளை குவிப்பதற்காகத்தான் உக்ரைனை அமெரிக்கா கைக்கூலியாக பயன்படுத்த முயன்றது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில்தான் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவின் மேற்கு எல்லைகளில் அமைந்துள்ள பெலாரஸ், போலந்து போன்ற நாடுகளை நேட்டோ தனது தளமாக மாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடும் என்று பெலாரஸ் ஜனா திபதி அலெக்ஸாண்டர் லுகாசென்கோ அச்சம் வெளியிட்டார். ஜனாதிபதி புடினுட னும் அவர் பேசினார். நேட்டோவை ஏற்க மறுத்தால், பெலாரஸ் தாக்கப்படக் கூடும் என்ற நிலை வந்தால், பெலாரஸ் மீதான நேட்டோவின் தாக்குதல் ரஷ்யாவின் மீதான தாக்குதலாகவே கருதப்படும், அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று புடின் உறுதி அளித்ததாக ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாசென்கோ கூறினார்.
10. உக்ரைனில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் – அதன் மீதான ரஷ்யாவின் போர் ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் கூறியுள்ளார். ரஷ்யாவின் செயல் சர்வதேச சட்டங்களை மீறியது என்று கடுமையாக கண்டித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த மாஸ்கோ, உக்ரைனில் கடந்த 8 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி அரசாங்கம் டான்பாஸ் பிரதேசத்தில் ஒரு இனப்படுகொலையையே அரங்கேற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக…
11. டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதி மக்களின் உணர்வுகளை நிராகரித்து, அவர்களது உரிமைகளை வலியுறுத்தும் மின்ஸ்க் உடன்பாடுகளை குழிதோண்டி புதைத்ததன் மூலம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மிகப்பெரும் அநீதி இழைத்தார் என்று ரஷ்ய நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் வியாசெஸ்லவ் வோலாடின் குற்றம் சாட்டினார். சுயேச்சையான கொள்கையை பின்பற்றுவதற்கு பதிலாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேட்டோ ராணுவத்தை உள்ளே கொண்டு வர முயற்சித்ததும், வாஷிங்டனின் செல்லப் பிள்ளையாக மாறிப் போனதும் எந்த நோக்கத்திற்காக என்று கேள்வி எழுப்பினார்.
குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதக்குவிப்பு
12. ராணுவ முகாம்கள் தகர்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் ராணுவத்தினர் ரஷ்ய எல்லையையொட்டியுள்ள மரியூபோல் மற்றும் ஆர்டியோவ்ஸ்க் ஆகிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்கு இடையே கனரக ஆயுதங்களை குவித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. இது தொடர்பாக ரஷ்ய ராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த டோனட்ஸ்க் பிரதேசத்தில் செயல்படும் மக்கள் குழுக்களின் பொறுப்பாளர்களில் ஒருவரான பசூரின், உடனடியாக குடியிருப்புப் பகுதிகளிலிருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும். ஆயுதமேந்திய உக்ரைன் படையினர் குடிமக்களின் பின்னால் ஒளிந்து கொள்வது முற்றிலும் ராணுவ விதிகளுக்கு எதிரானது என்று கூறினார்.
பேச மறுத்த அமெரிக்கா
13. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்பு ரஷ்யா, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராக இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ரஷ்யாவுடன் பேச மறுத்தார். ரஷ்யாவுடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா தெரிவித்தார்.
14. ரஷ்யா தாக்குதல் தொடுத்த நிலையில் உக்ரைன் அரசு ஜெர்மனியிடம் ஆயுதங்கள் சப்ளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோளை ஜெர்மனி அரசு நிராகரித்தது. உக்ரைன் தூதர் மூலம் கிடைக்கப் பெற்ற வேண்டுகோளை பரிசீலிக்கும் நிலையில் ஜெர்மனி அரசு இல்லை என்று ஜெர்மனி துணை அதிபர் ராபர்ட் ஹாபெக் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எதிர்பார்த்திருந்த நிலையில், சர்வதேச அரசியலில் எந்த முகாந்திரமும் இல்லாமல், ரஷ்யாவுடன் மோத முடியாது என்பதால் மேற்கண்ட சக்திகளிடமிருந்து உக்ரைனுக்கு உதவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தான் தனித்து விடப்பட்டதாக அபயக் குரல் எழுப்பியுள்ளார்.
ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை
15. உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, நாங்கள் நடத்திய ராணுவ நடவடிக்கையின் நோக்கம் – உக் ரைன் ராணுவமயமாகக் கூடாது, பாசிச மயமாகக் கூடாது என்பதுதான் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் வெள்ளியன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார். யாரும் உக்ரைனை ஆக்கிரமிக்க முடியாது என குறிப்பிட்ட அவர், உக்ரைன் மக்கள் தங்களது அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரம் உள்ளவர்கள், ஆனால் அங்கு அதிகாரத்துக்கு வந்துள்ள அரசு, நவீன பாசிசத்தை தூண்டிவிடுகிறது, உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை அரங்கேற்றுகிறது, ரஷ்யாவை குறிவைத்து மேற்கொள்ளப்படும் மேற்கத்திய நகர்வுகளுக்கு உக்ரைன் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்த மக்கள் உணர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
இணைந்திருங்கள்